Published : 06 Nov 2020 06:54 PM
Last Updated : 06 Nov 2020 06:54 PM
சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூஸிலாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அவர் நாடாளுமன்றத்தில் மலையாளத்தில் பேசி தனது உரையைத் தொடங்கிய காணொலியை மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட யாரும் நியூஸிலாந்து அரசில் இதுநாள்வரை அமைச்சராக இருந்தது இல்லை. முதல் முறையாக பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகியுள்ளார்.
நியூஸிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோகமான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அங்கு பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
முதல் கட்டமாக 5 அமைச்சர்களுடன் பிரதமர் ஜெசிந்தா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில் ஒரு அமைச்சர் இந்தியாவைப் பூர்வீமாகக்கொண்ட, சென்னையில் பிறந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
41 வயதாகும் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சென்னையில் கடந்த 1979-ம் ஆண்டு பிறந்தவர். கேரளாவைச் சேர்ந்த மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் சில ஆண்டுகள் இருந்த பிரியங்கா குடும்பத்தினர் அதன்பின் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தனர்.
சிங்கப்பூரில்தான் பிரியங்கா பள்ளிப் படிப்பைக் கற்றார். அதன்பின் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்த நிலையில் வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பை பிரியங்கா முடித்தார்.
2006-ம் ஆண்டு நியூஸிலாந்து தொழிலாளர் கட்சியில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சேர்ந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் மவுங்காகேக்கி தொகுதியில் பிரியங்கா போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இருப்பினும் கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தில் பிரியங்கா நுழைந்தார். அமைச்சர் பதவி ஏதுமின்றி இருந்த நிலையில் 2019-ம் ஆண்டு இன விவகாரத்துறை அமைச்சர் பதவி பிரியங்காவுக்கு வழங்கப்பட்டது
இந்த முறையும் தேர்தலில் பிரியங்கா ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தாலும், சமூகம் மற்றும் தன்னார்வத்துறை, பன்முகத்துறை, இன விவகாரத்துறை, இளைஞர் நலத்துறை, சமூக நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சராக பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாகப் பேசுகையில், ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடராமல் தனது தாய்மொழியான மலையாளத்தில் பேசிவிட்டு தனது கன்னிப்பேச்சைத் தொடங்கினார்.
அதில், “மதிப்புக்குரிய சபாநாயகருக்கு, முதல் முறையாக இந்த அவையில் பேசும் நான், எனது தாய்மொழியான மலையாளத்தில் சில வார்த்தைகள் பேசிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த வீடியோவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்ட கருத்தில், “இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நியூஸிலாந்து அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகப் பேசும்போது தனது தாய்மொழியான மலையாளத்தில் பேசுவது பெருமை” எனத் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகள் பழமையான வீடியோ இப்போது வைரலாகி லட்சக்கணக்கில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
Doing India proud, the Indian origin minister in New Zealand @priyancanzlp addresses her country's parliament in Malayalam.@IndiainNZ @NZinIndia @VMBJP @MEAIndia pic.twitter.com/f3yUURW2Em
— Hardeep Singh Puri (@HardeepSPuri) November 5, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT