Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

அமெரிக்க அரசியலின் அடுத்த அத்தியாயம்

டொனால்டு ட்ரம்ப்

தேர்தல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் அமெரிக்க அதிபர் யாரென்று உறுதியாகத் தெரியவில்லை. கரோனா தொற்றின் விளைவாக டிரம்ப் படுதோல்வி அடைவார் என்ற எண்ணற்ற கருத்துக் கணிப்புக்கள் தவிடு பொடியாகிவிட்டன. இன்னும் முடிவு அறிவிக்கப்படாத பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நெவாடா மாநில இறுதி ஒட்டு எண்ணிக்கையை வைத்தே அடுத்த அதிபர் யாரென்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த 4 மாநிலங்களில் ஏதாவது இரண்டில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையிலும், அரிசோனா மற்றும் நெவாடாவில் முன்னிலையிலும், பென்சில்வேனியாவில் முன்னிலைக்கு வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாலும் அடுத்த அதிபர் ஜோ பைடன் என்று உணர்வு பரவி வருகிறது.

அமரிக்க தேர்தல் முடிந்த செவ்வாய்க்கிழமை இரவு வன்முறையை எதிர்பார்த்து பெருநகரங்களில் உள்ள கடைகளின் வெளிக் கண்ணாடிகளை பாதுகாக்க தற்காலிக மரச் சுவர்கள் எழுப்பப்பட்டன. கடலோர மாநிலங்களில் சூறாவளியின் தாக்கத்தை குறைக்க இதுபோன்ற செயல்களை பார்த்து வளர்ந்த அமெரிக்கர்களுக்கு தேர்தல் வன்முறையை தவிர்க்க எழுப்பப்பட்ட மரச் சுவர்களும், தயார் நிலையில் வைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு படையும் நாட்டின் தற்போதைய நிலையை நினைவுபடுத்தின.

இவற்றுக்கு எல்லாம் மூலக் காரணங்கள் தேர்தல் அன்று சிறுபான்மையினரின் வாக்குரிமை ஒடுக்கப்படலாம் என்ற அச்சமும், வெள்ளையர்கள் சிலர் மேலாதிக்க தீவிரவாத அமைப்புக்களின் செயல்களுமே. முடிவுகள் அறிவிக்கப்படாமல் 2 இரவுகள் வன்முறை ஏதுமின்றி கடந்ததால் மக்கள் பெருமூச்சு விட்டனர்.

தேர்தல் முடிந்த அதிகாலையில் பல மாநிலங்களில் ஓட்டு எண்ணிக்கை முடியாத சூழ்நிலையில், தான் வெற்றி பெற்று விட்டதாக டிரம்ப் அறிவித்தது அமெரிக்க அரசியல் வரலாற்றில் மற்றொரு இழிவான காட்சி. தேசிய தேர்தல் என்றாலும் அமெரிக்க அரசியல் அமைப்புப்படி அதிபர் தேர்தல் நடத்துவது மாநில அரசுகளே. கரோனா பேரிடருக்கிடையே தேர்தலை மாநில அரசுகள் செம்மையாக நடத்தியுள்ளன. முடிவு தனக்கு சாதகமாக இல்லை என்பதால் பல மாநிலங்களின் தேர்வு முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை செல்ல போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப். மற்றவர்கள் மீது வழக்கு தொடுத்தே தொழில் நடத்திய டிரம்ப், அரசியலிலும் அவ்வாறு செயல்பட அமெரிக்க ஜனநாயகமோ உச்ச நீதிமன்றமோ ஒத்துழைக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவே.

ஜோ பைடன் தன் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்காமல் தீவிரமாக பிரச்சாரம் செய்திருந்தால் தற்போதைய இழுபறி சூழ்நிலை வந்திருக்காது. ‘‘நுணலுந் தன் வாயால் கெடும்’’ என்று எதிர்பாராமல் எதையாவது சொல்லி தன்னையே தர்மசங்கடமான சூழ்நிலையில் தள்ளுவதில் வல்லவர் பைடன் என்பதால் அவருடைய ஆலோசகர்கள் அவரை தேர்தல் களத்தில் அதிகம் ஈடுபட வைக்கவில்லை. டிரம்ப் எதிர் ஓட்டுக்கள், கரோனா தாக்கத்தின் விளைவுகள் இவற்றை வைத்தே வென்று விடலாம் என்பதே அவர்களின் தந்திரமாக இருந்தது.

டிரம்ப் கடைசி 3 வாரங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட பேரணிகளில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி, ‘‘நான் கரோனா தொற்றில் இருந்து மீண்டவன், தூங்கும் பைடனை நம்பினால் நாடே தூங்கிவிடும்’’ என்று அவருக்கே உரிய பாணியில் தாக்கி தன் ஆதரவாளர்களை பெருமளவில் தேர்தல் தினத்தன்று வாக்களிக்க செய்ததாலேயே அவருக்கு எதிர்பார்த்ததை விட வாக்கு எண்ணிக்கை கூடியுள்ளது.

அமெரிக்க அரசியலில் இதுவரை ஆளுகின்ற அதிபர் மீண்டும் போட்டியிடும் போது தோற்கடிக்கப்பட்டிருப்பது 3 முறையே. அந்த குறுகிய வரிசையில் 4-வதாக சிறப்பிடத்தை விரைவில் பெறவிருக்கிறார் ஜோ பைடன்.

இதுவரை எந்த அதிபர் வேட்பாளரும் பெறாத அளவில் 7 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள பைடன், ‘‘எனக்கு ஓட்டளித்தவர்கள், அளிக்காதவர்கள் எனப் பாராமல் அமெரிக்கர்கள் அனைவரின் அதிபராக சேவை செய்ய ஆவலோடு உள்ளேன்’’ என்று நேற்று கூறியுள்ளது அவர் நாட்டை ஒன்றுபடுத்தும் தலைவர் என்பதை உறுதிபடுத்துகிறது. அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்பிய பைடன், தேர்தலில் மீண்டும் போட்டியிட்டதற்கு காரணமே நாட்டை டிரம்பிடம் இருந்து மீட்டு ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே. நாட்டின் அடுத்த அத்தியாயத்தை மிகுந்த நம்பிக்கையோடு தொடங்க இருக்கின்றனர் அமெரிக்கர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x