Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை ரத்து செய்தது சவுதி அரசு: முதலாளி அனுமதி இன்றி எளிதில் வேலை மாறலாம்; நாடு திரும்பலாம்

ரியாத்

‘‘சவுதி அரேபியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான சர்ச்சைக்குரிய கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும்’’ என்று சவுதி மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நலத் துறை துணை அமைச்சர் சட்டாம் அல்ஹார்பி திட்டவட்டமாகத் தெரிவித்தார். புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் வேறு நிறுவனங்களுக்கு வேலை மாறி செல்ல முடியாது. நாட்டை விட்டும் வெளியேற முடியாது. அப்படி செய்ய வேண்டுமானால், பணிபுரியும் நிறுவனம் அனுமதி அளிக்க வேண்டும். பெரும்பாலும் பல நிறுவனங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், வேலைகளை மாற்றுவதற்கான சுதந்திரம் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒப்பந்த கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்று சவுதி மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நலத் துறை துணை அமைச்சர் சட்டாம் அல்ஹார்பி தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய சட்டதிட்டங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 2021 முதல் அமலுக்கு வரும். வெளிநாட்டு தொழிலாளர்கள், முதலாளிகளின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறலாம், வேறு வேலைக்கு மாற முதலாளியின் அனுமதி தேவை இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், வேலைக்கு வராத வெளிநாட்டு தொழிலாளர்கள், ‘ஓடிவிட்டனர்’ என்று முதலாளிகள் இனிமேல் புகார் அளிக்க முடியாது. இதுதொடர்பான கட்டுப்பாடு ரத்து செய்யப்படும். அதற்குப் பதில் ஒப்பந்த காலம் தொடர்பான விதிமுறைகள் சரிசெய்யப்படும் என்று அல்ஹார்பி கூறியுள்ளார்.

இதன்மூலம், சவுதி அரேபியாவில் திறமையுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் நிம்மதியாக பணிபுரியவும், உள்நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்குத் தீர்வும் கிடைக்கும். இதுபோன்ற மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல. மிகப் பெரியவை என்று துணை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பு மூலம் சவுதியில் தனியார் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், சம்பளம் அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் கோல்மேன் சாக்ஸ் குரூப் நிபுணர் பரூக் சவுசா கூறினார்.

சவுதி அரசின் நடவடிக்கையால், முதலாளிகளுக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இடையில் அரசு சான்றுடன் கூடிய ஒப்பந்தம் இனி மேற்கொள்ளப்படும். அத்துடன், வேறு வேலைக்கு மாறுதல் அல்லது நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறுதல் போன்றவற்றுக்கு முதலாளிகளின் கட்டாய ஒப்புதல் பெற வேண்டும் என்பதற்கு பதில், சவுதி அரசின் ஆன்லைன் இணையதள சேவை மூலம் நேரடியாக தொழிலாளர்கள் விண்ணப்பிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x