Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM
அமிதி சென்- பிசினஸ் லைன்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்க தேர்தல் முடிவுகளை இந்தியா ஆர்வமுடன் கவனித்து வருகிறது. யார் வெற்றியாளர் என்று தெரிய இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் நீதிமன்றத்துக்கு சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப் போவதாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார். எனவே முடிவுகள் எப்படி இருக்கும், அது அமெரிக்க - இந்திய உறவில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது போன்ற விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஆனால், ட்ரம்ப் - பைடன் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அமெரிக்க - இந்திய உறவு எப்போதும் போலவே தொடரும் என்றே தெரிகிறது. நிபுணர்களின் கருத்துகள்படி பார்க்கும் போது இந்தியா உலகளவில் தவிர்க்கவே முடியாத சந்தையாக விளங்குகிறது. எனவே ஜனநாயகக் கட்சியோ, குடியரசு கட்சியோ இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தக உறவை சிறப்பாக வைத்திருக்கவே விரும்பும். அதே சமயம் அமெரிக்காவின் நலன்களுக்காக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய சூழல் வந்தால் இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல எனலாம்.
ட்ரம்ப் ஆட்சி பொறுப்பேற்றதுமே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் அதிக உபரி பலனை அடையும் நாடுகளில் ஒன்று இந்தியா எனக் கூறி இந்தியாவுடனான வர்த்தகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இந்தியாவின் உபரி வர்த்தகமான 24 பில்லியன் டாலர் அமெரிக்க தொழில்துறையின் உள்ளீடு பொருட்களுக்கான ஏற்றுமதி மதிப்புதான் என்று விளக்கம் அளித்தும் ட்ரம்ப் நிர்வாகம் சமாதானம் அடையவில்லை.
இந்தியாவுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே ஒருதலைபட்சமாக எடுத்தவை. மேலும் அனைத்துமே உலக வர்த்தக நிறுவனம் வரையறுத்துள்ள விதிமுறைகளுக்கும் எதிரானவையாகவே இருந்தன.
முக்கியமாக ஹெச்1பி விசா விவகாரத்தில் ட் ரம்ப் நிர்வாகத்தின் முடிவு, இந்திய ஐடி துறைக்குப் பெரும் நெருக்கடியானது. அதேநேரம் அமெரிக்க சுகாதார திட்டத்துக்காக விசா கட்டணங்களை முன்னாள் அதிபர் ஒபாமா உயர்த்தியதையும் இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது.
திறன் வாய்ந்த இந்தியர்களை பயன்படுத்திக் கொள்வதில் இரு கட்சிகளும் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றன. எனவே, இந்தியா இந்த விஷயத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நிலைமையைக் கையாள வேண்டும். சில முடிவுகள் அரசியல் சார்ந்து எடுக்கப்படலாம். அதற்கேற்ப நம்முடைய நிலைப்பாடுகளை வகுக்க வேண்டும் என்கிறார் இன்போசிஸ் நிறுவன சிஓஓ பிரவின் ராவ். இதனாலேயே இன்போசிஸ் அமெரிக்காவில் 63 சதவீத அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, அமெரிக்க அரசியலை மதிப்பிடும் போது இந்தியாவுக்குச் சிறந்தது எது என்று பார்த்தால் பொருளாதாரத்தை விடவும் அரசியல், சமூக மற்றும் மனிதம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT