Published : 25 Oct 2015 03:17 PM
Last Updated : 25 Oct 2015 03:17 PM
அக்டோபர் 3-ம் தேதி ஆப்கன் மருத்துவமனை மீது அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 30-ஆக அதிகரித்துள்ளது.
அப்பாவி மக்கள் பலர் இதில் பலியானதாக ஆரம்பகட்ட நேட்டோ விசாரணை தெரிவிக்கிறது. அக்டோபர் 3-ம் தேதி வடக்கு குண்டுஸ் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் மருத்துவமனை ஒன்று சிக்கியது. உலகம் நெடுகிலும் கண்டனக்குரல்களை தட்டி எழுப்பிய இந்த கொடூர சம்பவம் குறித்து 3 விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
பிரான்ஸ் நாட்டு அறக்கட்டளை நடத்தும் இந்த மருத்துவமனையில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்ட செய்தியில், “மொத்தமாக இறந்தோர் எண்ணிக்கை இதுவரை 30-ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 நோயாளிகளும், 13 ஊழியர்களும் அடங்குவர். 7 பேர் உடல் அடையாளம் காணப்படவில்லை. நோயாளிகள் படுக்கையிலேயே எரிந்து பலியாகியுள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று அஞ்சுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இது பற்றி அமெரிக்கா, நேட்டோ, ஆப்கன் அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் குறித்து பதில் அளிக்க அமெரிக்காவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஆனால் மருத்துவமனை அறக்கட்டளையோ, சர்வதேச உண்மை அறியும் குழு விசாரணை தேவை என்று வலியுறுத்தி வருகிறது.
இத்தகைய மருத்துவனை இப்பகுதியில் இது ஒன்றுதான் என்ற நிலையில் தாக்குதல் காரணமாக அந்த மருத்துவமனையின் டிரவுமா மையம் மூடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT