Last Updated : 30 Sep, 2015 11:06 AM

 

Published : 30 Sep 2015 11:06 AM
Last Updated : 30 Sep 2015 11:06 AM

தொடர் சிக்கல்களில் துருக்கி - 9

முதலாம் உலகப் போரின் முடிவில் ஒட்டாமன் சாம் ராஜ்ஜியமும் தோற்கடிக் கப்பட்ட பிறகு மேற்கத்தியக் கூட்டு நாடுகள் வெற்றி ஆனந்தத்தில் திளைத்தார்கள். 1920-ல் உண்டான ஸெவ்ரெஸ் உடன்படிக்கையில் குர்துகளுக்கென ஒரு தனி நாடு உண்டாக ஒப்புக் கொண்டார்கள். (இந்த உடன்படிக்கை கூட்டு நாடு களுக்கும் ஒட்டாமன் துருக்கி சாம் ராஜ்யத்துக்குமிடையே ஏற்பட்டது).

ஆனால் அடுத்த மூன்றே ஆண்டு களில் குர்துகளின் கனவுகள் தகர்க்கப்பட்டன. காரணம் லாஸனே உடன்படிக்கை. இது கிட்டத்தட்ட ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் மீது கூட்டு நாடுகளால் திணிக்கப்பட்ட உடன்படிக்கை எனலாம். ஆனால் இதில் குர்துகளுக்கென்று தனி நாடு என்பதைப் பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.

ஆக குர்துகள் வெவ்வேறு நாடுகளில் சிறுபான்மையி னராகவே இருக்க நேரிட்டது.

‘‘தங்களுக்கு என்று ஒரு நாடு இல்லாத மாபெரும் இனம் எங்களுடையதுதான்’’ என்று குர்துகள் குமுறினர். அவர்கள் செயல்பாடு கடுமையாக இருந்தது. இதனால் ஐ.நா.சபை, ஐரோப்பிய யூனியன், நேட்டோ, அமெரிக்கா போன்ற பலவும் குர்துகளைத் தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்தன.

துருக்கியிலுள்ள குர்துகள் எவ்வளவு பேர்? ஆளுக்குத் தகுந்த படி 18 முதல் 25 சதவீதம் வரை கூறுகிறார்கள். தாங்கள் இரண்டரை லட்சம்பேர் துருக்கியில் வசிப்பதாக குர்துகள் அறிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் துருக்கியிலுள்ள சிறுபான்மையினரில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் குர்துகள்தான்.

1925, 1930, 1938 ஆகிய ஆண்டுகளில் குர்துகள், துருக்கி யில் புரட்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் துருக்கி அரசால் அந்தப் புரட்சிகளை அப்போது முழுமை யாகவே அடக்க முடிந்தது. என்றாலும் தொடர்ந்து மாறி மாறி குர்துகளை ஒரே இடத்தில் ஒட்டு மொத்தமாக வசிக்க விடாமல் செய்து கொண்டிருந்தது துருக்கிய அரசு.

ஒரு கட்டத்தில் நாட்டில் குர்திஷ் மொழியைப் பேசக் கூடாது. குர்து களின் பெயர்களையே பயன் படுத்தக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு கட்டங்களில் குர்துகளை அடக்க துருக்கிக்குப் பிற நாடுகளின் ஆதரவும் கிடைத்தது.

அவற்றில் முக்கியமானவை சோவியத் யூனியன், ஈரான் மற்றும் இராக்.

PKK எனப்படும் குர்திஸ்தான் அமைப்பு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவற்றால் தீவிரவாத அமைப்பாகவே பட்டியலிடப் பட்டுள்ளது. 1984லி ருந்து சுமார் 15 வருடங்களுக்கு இந்த அமைப்புக்கும், துருக்கிய ராணுவத்துக்கு மிடையே கடும் மோதல்கள் பலமுறை நடந்துள் ளன. இதில் PKK அமைப்பு மிதவாத குர்துகள்மீது நிகழ்த்திய தாக்குதல்களும் உண்டு.

ஒருபுறம் போராடிக் கொண்டே இன்னொரு புறம் துருக்கியின் பொதுத் தேர்தல்களிலும் குர்துகள் போட்டியிட்டனர். அப்படி நாடாளு மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் குர்து இனப் பெண்மணி லேலா ஜானா என்பவர். பதவியேற்பின்போது இவர் கூறிய உருது மொழி வாசகம் நாடாளுமன்றத்தில் பலத்த கைதட்டலைப் பெற்றது. ‘‘துருக்கிய மக்களும், குர்து மக்களும் சகோதர உணர்வோடு விளங்குவதற்காக இந்த உறுதி மொழியை நான் எடுக்கிறேன்’’ என்று தொடங்கினார் அவர்.

பொதுவாக துருக்கி நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை உண்டு. அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்வரை அது செல்லாது. ஆனால் 1994-ல் துருக்கிய நாடாளுமன்றம் இந்தச் சலுகையை நீக்கிக் கொண்டது.

இதைத் தொடர்ந்து (மேலே குறிப்பிட்ட பெண்மணி உட்பட) ஆறு குர்து இனத்தைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5 வருட சிறை தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம்.

ஐரோப்பிய யூனியன் இதை ஏற்கவில்லை. மனித உரிமைக்குப் போராடியதற்காக ஜானாவுக்குப் பரிசு வழங்கியது. துருக்கி செய்தது மனித மீறல் என்றது. ஐரோப்பிய யூனியனில் துருக்கியை உறுப்பி னராக சேர்த்துக் கொள்வதற்கு இது பெரும் தடையாக இருக்கும் என்றது. 2004-ல் ஜனாவை மட்டும் விடுவித்தது துருக்கிய அரசு.

குர்து அரசியல்வாதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் 1993 94-ல் நடைபெற்ற மறை முகக் கொலைகளை கடுமையாகக் கண்டித்தனர். அதாவது குர்து மற்றும் அசிரிய இனத்தைச் சேர்ந்த வர்களில் சுமார் 3000 பேர் மாயமாக மறைந்துவிட்டனர். ராணுவத்தின் திருவிளையாடல்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது.

நாட்டின் அதிகாரபூர்வ மொழி துருக்கிய மொழியான துர்க்கிஷ். 70லிருந்து 80 சதவீதம் பேர் துருக்கியர்கள். அதாவது தொன்மையான காலத்திலிருந்தே துருக்கியில் வசிப்பவர்கள். இவர்களின் முக்கிய மதம் இஸ்லாம். அதுவும் சன்னி பிரிவு. ஒட்டாமன் சாம்ராஜ்யம் துருக்கியில் கொடி கட்டிப் பறந்த காலத்திலிருந்தே இருப்பவர்கள்.

துருக்கியர்களை விட்டு விட்டால் பாக்கி இருக்கும் சிறுபான்மை இன மக்களில் அதிக எண்ணிக்கையில் குர்துகள் இருக் கிறார்கள். இவர்கள் துருக்கி முழு வதும் பரவி இருக்கிறார்கள். என்றாலும் அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். இந்தப் பகுதியைத்தான் அவர்கள் குர்திஸ்தான் என்கிறார்கள்.

மொத்தத்தில் குர்திஸ்தான் என்று அவர்கள் கூறும் பகுதி இப்போதைய துருக்கி, சிரியா, இராக், ஈரான் ஆகிய நான்கு நாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கப்பட்ட பகுதி.

இவற்றையெல்லாம் அந்தந்த நாடுகள் அங்கீகரித்துவிட்டனவா?

தெற்கு குர்திஸ்தான் (இராக்) ஏற்கனவே சுயாட்சி அந்தஸ்தை பெற்று விட்டது. 1970-ல் இராக் அரசுடன் இது செய்து கொண்ட ஒப்பந்தம் இந்த அங்கீகாரத்தை அதற்கு அளித்திருக்கிறது. பிற பகுதிகளைப் பொறுத்தவரை அந்த நாடுகள் குர்திஸ்தானை அங்கீகரிக்கவில்லை.

துருக்கியைப் பொருத்தவரை 1988-லிருந்தே சுயாட்சி கோரி குர்துகள் பலவித முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றில் அமைதியான நடவடிக்கை உண்டு. கெரில்லா வகை போர்த் தாக்குதலும் உண்டு.

(உலகம் உருளும்)





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x