

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி 50.5% வாக்கு சதவீதத்துடன் முன்னிலையில் இருந்து வருகிறது. குடியரசுக் கட்சி 48.1% வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தின் வாக்குப்பதிவு மையத்தில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “அரிசோனாவின் வாக்குப் பதிவு மையத்தில் கூடிய ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் 'எங்கள் வாக்குகளைத் திருடாதீர்கள். எங்கள் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்' என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தனர்” என்று செய்தி வெளியானது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளுடன் தேங்கியுள்ளார். விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களிலும் ஜோ பைடன் வென்றுள்ளார். இன்னும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த இறுதிக்கட்ட முடிவுகள் வெளியாகவில்லை.