Published : 05 Nov 2020 12:29 PM
Last Updated : 05 Nov 2020 12:29 PM
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்றும், அம்முடிவுகளுக்கு ட்ரம்ப் எவ்வாறு நடந்து கொள்வார் என்றும் முன்னரே கணித்த ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட செனட்டர் பெர்னி சாண்டர்ஸின் நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். ட்ரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகளுடன் தேங்கியுள்ளார். விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களிலும் ஜோ பைடன் வென்றுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்றும், அதற்கு ட்ரம்ப் எவ்வாறு நடந்து கொள்வார் என்றும் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஏற்கெனவே அளித்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகின்றது.
அந்த நேர்காணலில் தொகுப்பாளர், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் எப்போது தெரியும் என்று கேட்டார். அதற்கு பெர்னி சாண்டர்ஸ் அளித்த பதில்:
“நீங்கள் முக்கியக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இதனை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஓட்டும் எண்ணப்பட வேண்டும். அதன் காரணமாகவே நாம் ஒரே நாளில் முடிவுகளைப் பெற முடியாது. புளோரிடா, வெர்மண்ட் ஆகிய மாகாணங்கள் போல் இல்லாமல் பென்சில்வேனியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் தபால் ஓட்டுகளே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் தபால் ஒட்டுகளையே இம்மாகாணங்களில் பதிவு செய்வர். ஆனால் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் நேரடியாக வாக்களிப்பார்கள். இவ்வாறு இருக்கையில் வாக்கு எண்ணிக்கையின்போது, மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் குடியரசுக் கட்சி வெற்றி பெறுவதுபோல் இருக்கலாம். இதனால் ட்ரம்ப், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம். அமெரிக்க மக்களுக்கு அவர் நன்றியும் கூறலாம்.
ஆனால், அடுத்த நாள் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்போது பைடன் மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றது தெரியவரும். அவ்வாறு இருக்கும்போது தேர்தலில் மோசடி நடந்திருக்கும் என்று ட்ரம்ப் கூறுவார். நாங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறுவார். இதுதான் என் கவலை”.
இவ்வாறு பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்தார்.
இந்த நேர்காணல் இரு வாரங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெர்னி சாண்டர்ஸ் கூறியபடி அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதால், அந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT