Last Updated : 26 Oct, 2015 04:12 PM

 

Published : 26 Oct 2015 04:12 PM
Last Updated : 26 Oct 2015 04:12 PM

வெனிசுலா பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக அமெரிக்க இணையதளம் மீது வழக்கு

தவறான நாணய மதிப்புகளை வெளியிட்டு வெனிசுலாவின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதாக அமெரிக்க இணையதளம் ஒன்றின் மீது வெனிசுலா வழக்கு தொடர்ந்துள்ளது.

வெனிசுலா நாட்டு நாணயமான பொலிவாரின் கள்ளச் சந்தை மதிப்பை வெளியிட்டு நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்வதாகக் குற்றம்சாட்டி வெனிசுலா நாடு அமெரிக்க கோர்ட்டில் அமெரிக்காவின் அன்னியச் செலாவணி இணையதளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

டாலர்டுடே என்ற அந்த இணையதளம் கள்ளச் சந்தை பணமதிப்பை இட்டுக்கட்டி, பொய்யான மதிப்பை வெளியிட்டு வெனிசுலாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறது என்று வழக்கு தொடர்ந்த சட்ட நிறுவனம் ஸ்கொயர் பேட்டன் பாக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தில் வெளியிடப்படும் பொலிவார் நாணய மதிப்பு வெனிசுலாவின் அதிகாரபூர்வ நிதிக் கொள்கையின் அடிப்படையில் உண்மையான மதிப்பல்ல என்று சாடியுள்ளது வெனிசுலா.

கிழக்கு அமெரிக்க மாகாணமான டெலாவேரில் டாலர்டுடே உள்ளது. ஆனால் கொலம்பிய நகரமான கியுகுட்டாவில் இது இயங்கி வருகிறது.

அதிபர் நிகோலஸ் மதுரோவின் சோசலிச அரசாங்கம், "நாட்டுக்கு வெளியேயிருந்து தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு பொய்யான தகவல்களை அளித்து வெனிசுலாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முயல்கிறது டாலர் டுடே இணையம்" என்று குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இதனை சைபர்-பயங்கரவாதம் என்றும் வர்ணித்தது.

டாலர் டுடே தனது தவறான தகவல்கள் மூலம் வெனிசுலா மக்களின் வாங்கும் திறனை குறைப்பதோடு, மத்திய வங்கியின் அதிகாரத்தையும் வலுவிழக்கச் செய்து வருகிறது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தை தடை செய்யக் கோரவில்லை மாறாக வெனிசுலா பண மதிப்பை பற்றிய தவறான தகவல்களை வெளியிட தடை கோரப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று இத்தகைய தவறான செய்தியில் இந்த இணையதளம் டாலர் ஒன்றுக்கு 820 பொலிவார்கள் என்று வெளியிட்டது. இதனையடுத்து இந்த இணையதளம் வெனிசுலாவில் தடை செய்யப்பட்டது. திடீரென இப்படி பீதியைக் கிளப்பினால், மக்களின் வாங்கும் திறன் பெரிய அளவுக்கு குறைந்து விடுகிறது என்கிறது வெனிசுலா.

வெனிசுலாவில் சாவேஸ் காலத்திலிருந்தே அமெரிக்காவுடன் கடும் பகை நிலவி வருகிறது. இந்நிலயீல் டிசம்பர் 6-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறுகிறது. ஓபக் நாடுகளினால் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. ஓபக் நாடுகளுக்கு இணையாக சந்தையில் விலையை வெனிசுலாவினால் குறைக்க முடியவில்லை இதனால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

உலகின் 5-வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடாகும் வெனிசுலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x