Published : 02 Nov 2020 03:31 PM
Last Updated : 02 Nov 2020 03:31 PM
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்காவிட்டால் இந்தியா போர் தொடுக்கும் என்று கூறிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலிருந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பலுசிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அழித்துத் திரும்பியது. அப்போது, பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படைவீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கைது செய்யப்பட்ட அபிநந்தன், இரு நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் மார்ச் 1-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக, பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அயாஸ் சாதிக் கடந்த வாரம் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், “அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடந்தது.
அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, அபிநந்தனை ராணுவம் விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கே இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்றார்.
இதைக் கேட்டவுடன் ராணுவத் தளபதி ஜெனரல் பஜ்வாவின் கால்கள் நடுங்கின. முகம் வியர்த்துக் கொட்டியது. பாகிஸ்தானைத் தாக்க இந்தியா திட்டமிடவில்லை. ஆனால், இந்தியா முன் மண்டியிட்டு அபிநந்தனைத் திருப்பி அனுப்பவே ஆட்சியாளர்கள் விரும்பினர்” எனத் தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சாதிக்கின் பேச்சுக்கு ஆளும் கட்சித் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் சாதிக்கின் பேச்சுக்கு எதிராக ஏராளமான காவல் நிலையங்களில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அமிர்தரசஸுக்குச் செல்லலாம். அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யக் கூறி பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அரசு ஆலோசித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நவாஸ் கட்சியைச் சேர்ந்த சாதிக் தேசத்துரோகி என்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT