Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தால் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று: ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

டொனால்டு ட்ரம்ப்

நியூயார்க்

உலக மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவ.3) நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ‘கரோனா பரவல் காலத்தில் ட்ரம்ப் நடத்திய மிகப் பெரிய கூட்டங்களின் விளைவுகள்’ என்ற தலைப்பில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாயின. இதில், ஜூன் 20 முதல் செப்டம்பர் 22 வரை அதிபர் ட்ரம்ப் நடத்திய 18 பிரச்சாரக் கூட்டங்களும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்படவும் 700-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்கும் வழி வகுத்திருக்கலாம். இவர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, “முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிகாட்டு விதிகளை மக்கள் முழு அளவில் பின்பற்றாத நிலையில் மிகப் பெரிய கூட்டங்களால் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர். அவர்களின் பரிந்துரை மற்றும் எச்சரிக்கையை எங்கள் ஆய்வு வலுவாக ஆதரிக்கிறது. ட்ரம்ப் நடத்திய கூட்டங்களில் பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தன. இக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோரும் சில சமயங்களில் பல்லாயிரக்கணக்கானோரும் பங்கேற்றனர். நோய்த் தொற்று, மரணம் என இவர்கள் அதிக விலை கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

பைடன் விமர்சனம்

இந்த ஆய்வு முடிவு குறித்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பதிவில், “மக்களைப் பற்றி அதிபர் டரம்ப் கவலைப்பட மாட்டார். ஏன் தனது ஆதரவாளர்களைப் பற்றிக் கூட அவர் கவலைப்பட மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x