Published : 27 Sep 2015 11:27 AM
Last Updated : 27 Sep 2015 11:27 AM
1918-ல் ஒட்டாமன் சாம்ராஜ்யம் சரணடைந்தது. இளந்துருக்கியத் தலைவர்கள் ஜெர்மனிக்குப் பறந்தார்கள். ‘‘நீங்கள் செய்த இனப்படு கொலைகளுக்காக நாங்கள் உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்’’ என்ற உறுதிமொழியை ஜெர்மனி தந்திருந்தது.
ஆனால் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் இப்படி ஒரு இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று சாதிக்கிறது துருக்கிய அரசு. ‘‘அர்மீனியர்கள் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அவர்களைக் கொல்வது என்பது யுத்த தர்மம்’’ என்கிறது.
இன்று (மிக அதிக அளவில் கிறிஸ்தவர் களைக் கொண்டுள்ள) அமெரிக்கா மற்றும் வேறு சில மேலை நாடுகளின் முக்கியக் கூட்டாளியாக விளங்குகிறது துருக்கி. இதன் காரணமாகவே முன்பு நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பேசுவதற்குத் தயக்கம் காட்டுகிறது. ஒட்டாமன் சாம்ராஜ்ய ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் 15 லட்சம் அர்மீனியர்கள் துருக்கியர்களால் கொல்லப்பட்டனர். ‘இது சந்தேகமில்லாமல் இனப்படுகொலை. ஹிட்லரின் செயல்பாடுகளுக்கு இணையாக இதைக் கூறலாம்’. இது அர்மீனியர்களின் வாதம்.
ஆனால் துருக்கி இதை ஏற்றுக்கொள்ள வில்லை. ‘முதலாம் உலகப்போரில் இறந்த வர்களையெல்லாம் இதில் ஏற்றிச் சொல் கிறது அர்மீனியா. தவிர இந்தக் கலவரத் தில் நூற்றுக்கணக்கான துருக்கிய முஸ்லிம்களும்தானே இறந்தார்கள்’ என்கிறது துருக்கி. என்றாலும் மூன்று லட்சம் அர்மீனியர்கள் இறந்திருப்பார்கள் என்கிற அளவில் ஒத்துக் கொள்கிறது துருக்கி.
இப்போதைக்கு இந்த இரு நாடு களுக்கிடையே ஒழுங்கமைக்கப்பட்ட தூதரக உறவு இல்லை. ‘‘குறைந்தபட்சம் இனப்படு கொலை நடந்ததை துருக்கி ஒத்துக்கொள்ள வேண்டும்’’ என்று எதிர்பார்க்கிறது அர்மீனியா.
1991-ல் அர்மீனியா விடுதலை பெற்றது. துருக்கி அதை தனிநாடாக ஏற்றுக் கொண்டது. இன்றளவும் இருதரப்பிலும் கசப்புகள் தொடர்கின்றன.
துருக்கியை தங்கள் அமைப்பில் உறுப்பினர் ஆக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் ஏன் தயங்குகிறது என்பது குறித்தும், அப்படி உறுப்பினர் ஆக்கிக் கொண் டால் அதற்கு என்ன லாபம் என்பது குறித்தும் முன்பு விளக்கினோம்.இப்போது ஐரோப்பிய யூனியனில் சேர்வது குறித்து துருக்கியின் தரப்பில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனிக்கலாம்.
ஐரோப்பிய யூனியனை சமாதானப் படுத்தும் விதத்தில் சில பொருளாதாரப் புரட்சிகளில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதை எதிர்க்கும் துருக்கியர்களும் கணிசமாக உள்ளனர். ‘‘எப்படியும் ஐரோப்பிய யூனியன் நம்மைச் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. பிறகு எதற்கு அவர்கள் சொன்னபடியெல்லாம் ஆட வேண்டும்?’’ என்ற எதிர்ப்புக் குரல்கள் துருக்கியில் பலமாகவே ஒலிக்கத் தொடங் கியிருக்கின்றன.
அதுமட்டுமல்ல இதையே சாக்காக வைத்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் தங்களை விமர்சிப்பதையும் துருக்கி யர்கள் விரும்பவில்லை (இது போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுப்பப்படு கின்றன என்பது உண்மை). பல ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக துருக்கி நினைக்கிறது. உறுப்பினர் ஆவதற்கு மிகவும் கடுமையான நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதிப்பதாக கோபப்படுகின்றனர் துருக்கியர்கள்.
அதுமட்டுமல்ல தங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்ட பிறகு பின்னர் ஐரோப்பிய யூனியனிலிருந்து தங்கள் தேசத்தைக் கழற்றி விட்டால் அது தங்களுக்குப் பெருத்த அவமானம் என்றும் துருக்கியில் பேசப்படுகிறது.
அதுமட்டுமல்ல ‘‘நமக்கு எதுபோன்ற துருக்கி வேண்டும்?’’ என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஐரோப்பிய யூனியனில் சேர்ந்தால் துருக்கி தனது தனித்தன்மையை இழந்துவிடும் என்று கருதுகிறார்கள் சில துருக்கியர்கள். ‘‘கிறிஸ்த வர்களின் கூட்டமைப்பில் சேர நாம் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?’’ என்று வெளிப்படையாகவே துருக்கியின் மதவா திகள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். (என்றாலும் துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால் இவர்களின் எதிர்ப்புக் குரல் அதிகப் பலன் அளிக்கவில்லை).
ஆஸ்திரியா, ஹங்கேரி போன்ற நாடு களால் சரித்திரத்தை மறக்க முடியவில்லை. ஒட்டாமன் சாம்ராஜ்யத்தில் மிகுந்த துன்பங்களை அவர்கள் அனுபவித்தது உண்டு. ஒட்டாமன் சாமராஜ்யத்தின் அடக்கு முறைகளுக்கு துருக்கி பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்த சாம்ராஜ்யத்தின் இதயமாகத் திகழ்ந்த பகுதி துருக்கி.
இந்தக் கட்டுரையில் சற்று ‘உறுப்பினர் ஆக்கிய பிறகு நம்மை ஐரோப்பிய யூனியன் கழற்றிவிட்டுவிட்டால் என்னாவது? என்ற கேள்வி துருக்கியில் எழுந்திருப்பதாகக் குறிப்பிட்டோம். அப்படியொரு காரியத்தை எந்த நாடு செய்துவிடும்? நாடு என்ன, சில நாடுகளே செய்ய வாய்ப்பு உண்டு.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT