Published : 05 Sep 2015 09:50 AM
Last Updated : 05 Sep 2015 09:50 AM

இலங்கையில் 42 அமைச்சர்கள் பதவியேற்பு

கொழும்பு இலங்கையில் நேற்று 42 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதிபர் மைத்ரிபால சிறிசேனா அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இலங்கையின் முக்கிய கட்சிகளான லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்நிலையில் நேற்று அமைச்சரவை பதவியேற்பு விழா கொழும்பில் உள்ள இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 42 பேர் அமைச்சர் பொறுப்பு ஏற்றனர். இதில் 3 தமிழர்கள், 4 முஸ்லிம் அமைச்சர்களும் அடங்குவர்.

இதில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய கொள்கை வடிவமைப்பு மற்றும் பொருளாதார விவகாரத் துறை பொறுப்பை ஏற்றார். அதைத்தொடர்ந்து அவரது கட்சியைச் சேர்ந்த ஜான் அமரதுங் சுற்றுலா மேம்பாடு, கிறிஸ்தவர் விவகார பொறுப்பு அமைச்சராக பதவியேற்றார். பின்னர் மற்ற அமைச்சர்கள் பதவியேற்றனர்.

42 அமைச்சர்களில் 31 பேர் ஐக்கிய தேசிய கட்சியையும் 11 பேர் லங்கா சுதந்திர கட்சியையும் சேர்ந்தவர்கள். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 2 பேர் பெண்கள். இவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள்.

10 நாட்களுக்கு முன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பபட்ட மங்களா சமரவீரா மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. கேபினட் அமைச்சர்கள் எண்ணிக்கை 48ஐ தாண்டாதவாறு அதிகரிக்கவும் இதர பிரிவு அமைச்சர்கள் 45-க்கு

மேல் போகாதவகையில் உயர்த்தவும் நாடாளுமன்றம் வியாழக்கிழமை தீரமானம் நிறைவேற்றியது.

தமிழர்களான டி.எம்.சுவாமிநாதன், பழனி திகம்பரம், மனோ கணேசன் ஆகியோரும் முஸ்லிம்கள் தரப்பில் ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலர் கபிர் ஹஷீண், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், அகில சிலோன் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதிஹுதீன், ஐக்கிய தேசிய கட்சி கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் முகமது ஹஷிம் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x