Last Updated : 22 Sep, 2015 10:31 AM

 

Published : 22 Sep 2015 10:31 AM
Last Updated : 22 Sep 2015 10:31 AM

தொடர் சிக்கல்களில் துருக்கி - 4

ஐரோப்பிய யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்வது பற்றிப் பிற ஐரோப்பிய நாடுகளின் இருவேறு கோணங்களையும் மேலும் பார்ப்போம்.

துருக்கியின் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது. சொல்லப் போனால் பல ஐரோப்பிய நாடுகளைவிட துருக்கியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் திருப்தி தருவதாகவே உள்ளது. இந்த விஷயத்தில் தெற்கு ஐரோப்பிய நாடுகள் துருக்கியைப் பார்த்து பொறாமைப்படுகின்றன என்றுகூடச் சொல்லலாம்.

நியூயார்க், லண்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களை விட்டுவிட்டால் இஸ்தான்புல் நகரில்தான் உலகில் மிக அதிகமான கோடீஸ்வரர்கள் வசிக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால் துருக்கியை உறுப்பினராக்குவது ஐரோப்பிய யூனியனுக்கு ஒரு வரம்தான்.

ஆனாலும் உலக அளவீட்டின் படி துருக்கி ஒரு வளர்ச்சியடையாத நாடு. ஒரு கவுரவத்துக்கு வேண்டு மானால் வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்று கூறலாம். அவ்வளவு தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளின் சராசரி ஆண்டு வருமானத்தில் பாதியைக்கூட அடைய முடியாமல் தவிக்கிறது துருக்கி. போதிய பொருளாதார சீர்திருத்தங்கள் துருக்கியில் நடைபெறாததன் காரணமாக அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

தொன்மையான துருக்கி மரபுகளின் வேர்கள் மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இருக்கிறதே தவிர, ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரமாக புலப்படவில்லை. கிறிஸ்தவ நாடுகளால் நிரம்பியுள்ள ஐரோப்பிய யூனியன், துருக்கியை அனுமதிப்பதன் மூலம் மாபெரும் சங்கடங்களுக்கு வாசலைத் திறந்து விட்டதாக ஆகிவிடலாம்.

தவிர ‘துருக்கி’ என்ற வார்த்தையே சைப்ரஸ் மக்களுக்குப் கேட்கப் பிடிக்காமல் போய்விட்டது. இந்தக் கோணத்தில் பார்க்கும்போதும் துருக்கியை அனுமதிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய யூனியனுக்கு கூறத் தோன்றுகிறது.

பொருளாதாரச் சரிவுகள் அதிக நிதிப்பாதுகாப்புகள் குறித்த அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கி விட்டன. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் சரிந்து அதை ‘ஐரோப்பாவின் நோயாளி’’ என்றே பிற ஐரோப்பிய நாடுகளை அழைக்க வைத்து விட்டது.

என்றாலும் துருக்கிக்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் உள்ள பந்தம் வேறொரு வகையில் அதிகமாகி வருகிறது.

சரித்திரப்படி பார்த்தால் துருக்கியின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான துருக்கியர்கள் ஏற்கெனவே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டின் குடி உரிமையையும் பெற்று விட்டனர்.

துருக்கிக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே உள்ள வணிகம் கடந்த இருபது ஆண்டுகளில் பெருகியுள்ளது.

ஐரோப்பாவின் எல்லைகள் மிகத் தெளிவாக வரையறுக்கப் படவில்லை. கிறிஸ்தவப் பகுதி களையெல்லாம் தனக்குள் இணைத்துவிட வேண்டும் என்று ஐரோப்பாவின் எல்லை விரிவான தைத் தொடர்ந்து புதிய எல்லைகள் உருவாயின. ஐரோப்பாவின் கிழக்கு எல்லைதான் ஐரோப்பா வின் வெளி எல்லையாக கருதப்படு கிறது. இந்தப் பகுதி ஆசியா விலிருந்து வேறுபட்டதுதான். என்றாலும் ஐரோப்பிய அடிப்படை என்று கருதப்படுவதிலிருந்தும் மாறுபட்டது. கிரீஸ், ரஷ்யா, பால்கன் போன்றவற்றை இப்படிக் கூறலாம். ஏதோ இரண்டாந்தர ஐரோப்பிய நாடுகள்போல இவை கருதப்படுகின்றன. என்றாலும் புவி அமைப்பின்படி இவை ஐரோப்பாவாகத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவிதத்தில் எதிரிகளாகவும் இவை கருதப்படுகின்றன.

இந்தப் பின்னணிகூட துருக் கியை உறுப்பினராக அனுமதிப் பதில் ஐரோப்பிய யூனியனுக்கு தயக்கம் ஏற்படச் செய்கிறது.

டென்மார்க்கின் பிரதமர் துருக்கி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தீவிரவாதத்தை அது போதிய அளவு அடக்க வில்லை என்பதுதான் காரணமாம். சைப்ரஸின் கடல் எல்லைக்குள் துருக்கியக் கப்பல்கள் நுழைந்ததை ஐரோப்பிய யூனியன் கண்டித்திருக்கிறது.

‘‘துருக்கியின் நிலைப்பாடுகள் கவலை அளிக்கின்றன’’ என்று கூறியுள்ளார் நெதர்லாந்து தூதர்.

ஒரு பேச்சுக்கு இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்ப் போம். சைப்ரஸ் பிரச்னை தீர்க்கப் படுகிறது. ஐரோப்பிய யூனியன் தன் கடுமையான நிபந்தனைகளைத் தளர்த்துகிறது. அதேசமயம் துருக்கியும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கும் மாறறங்களைக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டு துருக்கி ஐரோப்பிய யூனியனில் உறுப்பி னராகிறது.

ஆனால் பிரான்ஸும் ஆஸ்திரி யாவும் அதைக் கடுமையாக எதிர்த்தால்? ஒரு தேசிய பிரகடன மாக துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று கூறி விட்டால்? ஐரோப்பிய யூனியனுக்கு அது பெரும் தலைவலியாக மாறும்.

சமீபகாலமாக துருக்கியை சேர்த்துக் கொள்ள வேண்டாம் எனும் ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறதாம். முக்கிய மாக ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் வெளிப் படையாகவே துருக்கியை சேர்த்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக் கின்றன.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x