Published : 09 Oct 2020 09:40 AM
Last Updated : 09 Oct 2020 09:40 AM
நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபராகிவிடுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் போட்டியிடுகிறார்.
அதிபர் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி, அதிபர் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் நடந்த முதல் கட்ட விவாதத்தில் அதிபர் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் விவாதித்தனர். ஆனால், அடுத்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில், துணை அதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ், மைக் பென்ஸ் இடையே நேரடி விவாதம் நடந்தது. அப்போது, கரோனா வைரஸ் பாதிப்பை அதிபர் ட்ரம்ப் கையாண்டவிதம், சீனாவுடன் உறவு, இனவெறி மோதல்கள், பருவநிலை மாறுபாடு போன்றவை குறித்து கமலா ஹாரிஸ் கடுமையாகச் சாடினார்.
அதிபர் ட்ரம்ப், ஜோ பிடன் இருவரும் தங்கள் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தனித்தனியே கருத்துகளைத் தெரிவித்தனர்
இதில் அதிபர் ட்ரம்ப் கரோனா சிகிச்சைக்குப் பின் முதல் முறையாக ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“இரு துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே நடந்த விவாதம் சரிசமமானது என்று நான் நினைக்கவில்லை. கமலா ஹாரிஸ் கொடூரமானவர். அவருடைய பேச்சால் நாங்கள் வீழ்ந்துவிடுவோம் என நான் நினைக்கவில்லை.
ஆனால், விவாதத்தின்போது யாருமே கமலா ஹாரிஸ் பேச்சை ரசிக்கவில்லை. கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். பெர்னி சான்டரிஸ்க்கு மிகவும் நெருங்கியவர் கமலா ஹாரிஸ். இது ஒவ்வொருவருக்கும் தெரியும். நவம்பர் 3-ம் தேதி நடக்கும் தேர்தலில் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா அதிபராகிவிடுவார்.
நமது நாட்டுக்கு ஒரு கம்யூனிஸ்டையா தேர்வு செய்யப் போகிறோம். ஜோ பிடன் அதிபராகப் பதவி ஏற்றால் இரு மாதங்கள்கூட நீடிக்கமாட்டார் என்பது என்னுடைய கருத்து.
கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் அல்ல. சோசலிஸ்டுக்கும் அப்பாற்பட்டவர் கமலா. கமலா ஹாரிஸின் கருத்துகளைப் பாருங்கள். எல்லைகளைத் திறந்துவிடுவேன் என்று கூறுகிறார். கொலைகாரர்களையும், சதித்திட்டம் தீட்டுவோர்களையும், பலாத்காரம் செய்பவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முயல்கிறார்.”
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT