Published : 05 Oct 2020 03:30 PM
Last Updated : 05 Oct 2020 03:30 PM

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மரணிக்க வேண்டும் என்று கோரும் ட்வீட்டுக்கள் நீக்கப்படும்: ட்விட்டர் திட்டவட்டம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறக்க வேண்டும் என்று கோரும் ட்வீட்டுகளை உடனடியாக நீக்குவோம் என ட்விட்டர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் அந்த கணக்குகள் ட்விட்டர் விதிமுறைகளை மீறியதால் அதன் மீது கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலானியா ட்ரம்புக்கும் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நுரையீரலை தாக்கும் கரோனா கிருமியால் ட்ரம்ப் இறக்க வேண்டும் என்று ட்விட்டரில் சிலர் பதிவிட ஆரம்பித்தனர். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்படியான ட்வீட்டுகள் மீது ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே, ட்ரம்ப் குறித்த அவதூறு ட்வீட்டுகள் நீக்கப்படும் என்று ட்விட்டர் தரப்பு கூறியுள்ளது. ட்விட்டர் விதிமுறைகளில் தவறான நடத்தை குறித்து, "ஒருவர் சாக வேண்டும் என்று விரும்பும், நம்பும், வெளிப்படையாக தெரிவிக்கும் கருத்துகளை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். அதே போல ஒருவர் மீதோ அல்லது ஒரு குழு மீதோ வன்முறை பிரயோகிக்க வேண்டும், நோய் வர வேண்டும் என்றெல்லாம் கோரும் ட்வீட்டுகளையும் சகிக்க மாட்டோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ஃபேஸ்புக்கில் இப்படியான கருத்துகள் நீக்கப்படாது என்று தெரிகிறது. ஏனென்றால் ஃபேஸ்புக் விதிகளின் படி, ட்ரம்ப்பை டேக் செய்யாமல் இப்படிக் கருத்துப் பதிவிடுவது விதிமுறைக்குப் புறம்பாகாது.

நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப், வாஷிங்க்டனில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அதி நவீன வசதிகள் இருக்கும் இன்னொரு ராணுவ மருத்துவமனைக்கு ட்ரம்ப் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ஐ.ஏ.என்.எஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x