Last Updated : 10 Sep, 2015 05:26 PM

 

Published : 10 Sep 2015 05:26 PM
Last Updated : 10 Sep 2015 05:26 PM

அய்லான் புகைப்படத்தைக் காட்டி ஐ.எஸ். எச்சரிக்கை பிரச்சாரம்

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லான் குர்தியின் உடல் குறித்த புகைப்படம் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி வரும் நிலையில், அதே புகைப்படத்தைக் காட்டி அகதிகளை எச்சரித்து வருகிறது இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) அமைப்பு.

அண்மையில் சிரியாவின் கொபானி நகரில் இருந்து 23 பேர் இரண்டு படகுகளில் கிரீஸுக்கு புறப்பட்டனர். துருக்கி அருகே அவர்கள் வந்தபோது படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் துருக்கியின் சுற்றுலா தலமான கோஸ் கடற்கரையில் ஒதுங்கின.

இதில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரை ஒதுங்கி கிடக்கும் காட்சி கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. சிறுவனின் தாய் ரேஹன் (35), சகோதரன் காலிப் (5) ஆகியோரும் கரையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். தந்தை அப்துல்லா மட்டும் உயிர் பிழைத்துள்ளார். மொத்த குடும்பத்தையும் இழந்துவிட்ட அவர், குழந்தைகளோடு சேர்த்து தன்னையும் புதைத்துவிடுமாறு கதறி அழுதகாட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய சிறுவனின் புகைப்படத்தைக் கொண்டு தற்போது இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு அகதிகளை எச்சரித்துள்ளது, அதாவது, மேற்கு நாடுகளுக்குச் செல்வது இத்தகைய பாவத்தில் போய் முடியும் என்று தொனிக்கும் வாசகத்துடன் அகதிகளை எச்சரித்துள்ளது.

இது பற்றி, ஐ.எஸ். நடத்தும், ஆங்கில மொழி இதழான தாபிக்கில் அய்லான் குர்தியின் புகைப்படத்தை வெளியிட்டு, “தாருல்-இஸ்லாமை கைவிடுவதன் அபாயம்” என்று தலைப்பிட்டுள்ளது.

“சிரியா நாட்டினரும், லிபியா நாட்டினரும், தாங்கள் வளர்த்து ஆளாக்க வேண்டியவர்களின் வாழ்க்கையை இத்தகைய அபாயத்துக்கு ஆட்படுத்துவது வருத்தம் ஏற்படுத்துகிறது. சிலுவைப்போர் நடத்தும் அபாய நிலங்களுக்கு இவர்கள் பெயர்வதன் மூலம் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் அபாயகரமான மிகப்பெரிய பாவகாரியத்தைச் செய்கின்றனர். மேற்கு நாடுகளுக்கு குழந்தைகளைக் கொண்டு செல்வதன் மூலம் மதுப்பழக்கம், தகாத பாலுறவு உள்ளிட்ட தீமைகளுக்கு இவர்கள் ஆளாகிவிடுவர்” என்று எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x