Published : 02 Oct 2020 01:29 PM
Last Updated : 02 Oct 2020 01:29 PM
கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை கட்டுப்பாடுகளுடன் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதித்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக சர்வதேச விமானப்போக்குவரத்துச் சேவை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர்.தாம்போ சர்வதேச விமானநிலையத்தில் முதன்முதலாக ஜெர்மனியின் லூப்தான்ஸா விமானங்கள் வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து ஜாம்பியா, கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் இருந்தும் விமானங்கள் வரத் தொடங்கின.
கேப்டவுன், டர்பன் நகரிலும் நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
சர்வதேச பயணிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் முன் கண்டிப்பாக 72 மணிநேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேமயம், 50 நாடுகளில் இருந்து எந்த சுற்றுலாப்பயணியும் தென் ஆப்பிரி்க்காவுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் அனுமதியில்லை. இந்த பட்டியல் அடுத்த ஒவ்வொரு 2 வாரங்களுக்குப்பின் சூழலை ஆய்வு செய்து மீண்டும் திருத்தி அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
பயணிகள் அனைவரும் கரோனா வைரஸ் பரிசோதனைச் சான்றிதழ், காப்பீடு, தனிமைப்படுத்துதலுக்கான கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அதற்குரிய சிகிச்சை கட்டணமும் செலுத்த வேண்டும்.
தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை அமைச்சர் மாம்லோகோ குபாயி குபேனே நேற்று ஜோகன்னஸ்பர்க் விமானநிலையத்துக்கு வந்து சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். கரோனா வைரத் தடுப்பு நடவடிக்கைள், கட்டுப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார் மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் நிலப்பகுதி எல்லைகளையும் திறந்துள்ளது. இதனால் போட்ஸ்வானா, எஸ்வாத்னி, லெசோதோ, மொசாம்பிக், நமிபியா, ஜிம்பாப்பே ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை கரோனாவில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.16,866 பேர் உயிரிழந்தனர். 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இருந்தபோதிலும்கூட சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT