Published : 30 Sep 2020 06:05 PM
Last Updated : 30 Sep 2020 06:05 PM
சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, ''நாங்கள் சீனாவில் நடந்து கொண்டிருப்பதைக் கவனித்து வருகிறோம். சீனாவில் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன'' என்றார்.
மேலும், ஹாங்காங்கில் சீனாவின் நிலைப்பாட்டையும் மெர்கல் விமர்சித்தார்.
சீனாவின் வடமேற்கில் உள்ளது நிங்ஜியா மண்டலம். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இங்குள்ள டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்துவிட்டு புதிதாக மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், மீறினால் மசூதியை அரசே அப்புறப்படுத்தும் என்று சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் ரஷ்யா, மங்கோலியா, இந்தியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
இங்கு வசிக்கும் உய்குர் முஸ்லிம் மக்களை சீன மயமாக்க, அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருவதாகப் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், உய்குர் இன மக்களை சீன மயமாக்க, ஆவணப்படுத்தப்பட்ட அகதிகள் முகாம் மற்றும் சிறைகளை சீனா ரகசியமாக வைத்துள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT