Published : 15 Sep 2015 04:56 PM
Last Updated : 15 Sep 2015 04:56 PM
துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் அகதிகளுடன் பயணம் செய்த ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் பலியாயினர். மேலும் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கிரீஸ் நாட்டின் கோஸ் தீவை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த மரத்தாலான படகு (20 மீட்டர்), துருக்கியின் தட்கா மாவட்ட கடற்கரைக்கு அருகே விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த துருக்கி கடலோர காவல் படையினர், அப்பகுதிக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 22 பேர் பலியானதாகவும் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகே உள்ள போட்ரம் நகர கடற்கரையில்தான் சிரியாவைச் சேர்ந்த குழந்தை அய்லான் குர்தியின் சடலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒதுங்கியது. இது தொடர்பான புகைப்படம் உலகையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கான அகதிகள் துருக்கி கடல் வழியாகத்தான் படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கின்றனர். அப்போது விபத்தில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.
கிரீஸ் நாட்டின் பர்மகோனிசி தீவுக்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு படகு கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுவது அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8.5 லட்சம் அகதிகள் அங்கு குடியேறி உள்ளதாக ஐ.நா.அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் சிரியாவில் 4 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT