Published : 12 Sep 2020 11:07 AM
Last Updated : 12 Sep 2020 11:07 AM
உலகையே உலுக்கிய போலீஸ் கொலையான அமெரிக்க கருப்பரினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் மினியாபோலிசைச் சேர்ந்த 4 மாஜி போலீஸ் அதிகாரிகளும் கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக சிறப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஹென்னெபின் கண்ட்ரி கோர்ட்டில் இந்த விசாரணை நடைபெற்ற போது இதனை தெரிவித்தார்.
மே 25ம் தேதிக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட டெரிக் சாவ்வின், அலெக்சாண்டர் குயெங், தாமஸ் லேன், டூ தாவோ ஆகியோர் முதல் முறையாக நால்வர் கூட்டணியாக கோர்ட்டுக்கு வந்தனர், டெரிக் சாவ்வின் என்ற போலீஸ் அதிகாரிதான் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் 9 நிமிடங்கள் மிதித்த போலீஸ் அதிகாரி.
போலீஸார் தரப்பில் கோர்ட்டில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் ஃபெண்டானில் என்ற போதை மருந்து அளவுக்கதிகமாக இருந்ததால் ஜார்ஜ் பிளாய்ட் இறந்தார், போலீஸ் காலால் மிதித்ததனால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமல்ல என்று தாக்கல் செய்திருந்தனர். இதனால் அங்கு கூடியிருந்த கருப்பரின மக்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் ஓவர்டோஸ் பற்றி வழக்கறிஞர் பென் கிரம்ப் கோர்ட்டுக்கு வெளியே கூறும்போது, “ஜார்ஜ் பிளாய்டைக் கொன்றது நிறவெறி ஓவர் டோஸ், பலப்பிரயோக ஓவர் டோஸ்தான், இந்நிலையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் போதை ப்பொருள் ஓவர் டோஸினால் இறந்தார் என்று இன்னொரு முறை கொல்லப்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக கட்யால் என்ற வழக்கறிஞர் கோர்ட்டில், “நான் வாழ்க்கையில் நிறைய பார்த்திருக்கிறேன், வீடியோ மட்டுமல்ல. இந்த நான்கு பேரும் சேர்ந்தே இந்த செயலைச் செய்தனர். ஜார்ஜ் பிளாய்ட் தரையில் கிடந்த அந்த 9 நிமிடங்களும் இந்த நால்வரும் தங்களுக்கிடையே பேசிக்கொண்டிருந்தனர்.
ஜார்ஜ் பிளாய்டுக்கு உதவாமல் 2ம் தர கொலைக்கு உதவிபுரிந்ததாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை நால்வரும் மறுத்து பிரமாணப்பத்திரம் அளித்தனர்.
மினியாபோலீஸ் குடும்ப நீதி மையத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். இவர்கள் ‘கருப்பர் உயிர் முக்கியம்’ என்று கத்தினர். நீதியில்லையேல் அமைதியிருக்காது என்று எச்சரித்தனர். போலீஸாரை ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று கோஷம் எழுப்பினர்.
நீதிபதி காஹில் ஜூரி தேர்வுக்கான 2 வாரங்களுடன் 6 வாரங்கள் இந்த வழக்கை விசாரிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT