Last Updated : 11 Sep, 2015 11:56 AM

 

Published : 11 Sep 2015 11:56 AM
Last Updated : 11 Sep 2015 11:56 AM

10,000 சிரிய அகதிகளை அமெரிக்கா ஏற்கும்: ஒபாமா

அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவினுள் அனுமதிக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அகதிகள் விவகாரத்தில் உதவும் பான்மையில் அமெரிக்காவின் பங்கு கூறும் அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் கூறும்போது, "சிரியா நாட்டு அகதிகளின் அனுமதிக்கான எண்ணிக்கையை அதிபர் கணக்கிட உத்தரவிட்டுள்ளார். அந்த எண்ணிக்கை 1800ஐ எட்டுகிறது. இம்மாத இறுதிக்குள் இவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.

இந்தப் பிரச்சினையின் தன்மையை அரசு நன்கு புரிந்து கொண்டுள்ளது. போர்ச் சூழலில் இருக்கும் மக்களின் வலியை அமெரிக்கா அறியும். அவர்களுக்கான அடிப்படை தேவையிலிருந்து அனைத்து விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம். மனித உரிமை பிரச்சினைகளுக்கு அமெரிக்கா என்றென்றும் முன்னுரிமை அளிக்கும்" என்றார்.

சிரிய அகதிகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி புரிவதில் மெத்தனம் காட்டுவதாக சர்வதேச அளவில் கேள்வி எழுந்தது. இதனையடுத்து அவர்களுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.

இதில், அமெரிக்கா வருடந்தோறும் சுமார் 70,000 அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறது. ஆனால் சிரிய நாட்டு அகதிகள் விவகாரத்தில் அக்கறை காட்டாதது குறித்து கேள்வி எழுந்த நிலையில அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிரிய அகதிகளை அனுமதிக்காததற்கு தீவிரவாத அச்சுறுத்தலை மிகப் பெரிய இடையூறாக அமெரிக்கா கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகள் பெயரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவலாம்

சிரிய நாட்டு அகதிகளுடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பது குறித்து பெரிய அளவில் முன்னெச்சரிக்கையை அமெரிக்கா எடுத்து வருகிறது.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கோமே கூறும்போது, "ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரிய அகதிகளுடன் நுழைய பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது. யார் உள்ளே வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஐ.நா. குழு மூலம் அல்லாமல் வேறு வழியில் வரும் அகதிகளை கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இங்கு பல அபாயங்கள் உள்ளது." என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x