Last Updated : 10 Sep, 2020 11:55 AM

 

Published : 10 Sep 2020 11:55 AM
Last Updated : 10 Sep 2020 11:55 AM

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டி மரியாதை

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா : கோப்புப்படம்

வாஷிங்டன்

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து படித்து வளர்ந்து விண்வெளிக்குள் சென்ற முதல் பெண் கல்பனா சாவ்லா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரி்க்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் தன்னுடைய அடுத்த விண்கலத்துக்கு எஸ்எஸ் கல்பனா சாவ்லா என்று பெயர்சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி கொலம்பியாவில் கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்கள் பயணித்த விண்கலம் வானில் வெடித்துச் சிதறியதன் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரி்க்காவின் நார்த்ராப் க்ரூம்மான் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “நாசாவுக்குச் சென்ற இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவுக்கு இன்று நாங்கள் மரியாதை செலுத்த இருக்கிறோம். மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லா அளித்த பங்களிப்பு நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும்.

எங்களின் அடுத்த என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டுவதில் நார்த்ராப் க்ரூம்மேன் நிறுவனம் பெருமைகொள்கிறது. மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலத்துக்கு முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர்களுக்கு மரியாதை அளிப்பது எங்கள் நிறுவனத்தின் பாரம்பரிய வழக்கம்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்து முதன் முதலாக விண்வெளிக்குச் சென்ற கல்பனா சாவ்லா வரலாற்றில் இடம் பிடித்தவர் என்பதால் அவரின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

விண்வெளித் திட்டங்களுக்கு கல்பனா சாவ்லா ஏராளமான தியாகங்களைச் செய்து, தனது உயிரையும் இழந்துள்ளார். அவரின் மரபு, வழிகாட்டல் அடுத்துவரும் விண்வெளி வீரர்களுக்கும் இருக்க வேண்டும், அவரின் காலடிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளது.

நார்த்ராப் க்ரூம்மேன் அன்டாரஸ் என்ஜி-14 மிஷனின் கல்பனா சாவ்லா ராக்கெட் விர்ஜினியாவில் உள்ள நாசாவின் மிட் அட்லாண்டின் ரீஜனல் ஸ்பேஸ்போர்ட் தளத்திலிருந்து வரும் 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த விண்கலத்தில் ஏறக்குறைய 3,629 கிலோ கொண்ட பொருட்களை விண்வெளியில் உள்ள நாசா விண்வெளிநிலையத்துக்கு எடுத்துச் செல்கிறது.

ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961ம் ஆண்டு கல்பனா சாவ்லா பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் படித்த கல்பனா சாவ்லா, 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பின்னர், 1984ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பல்தேரில் கொலராடோ பல்கலைக்கழகத்தில் 2-வது முதுகலைப் பட்டமும், 1988ல் விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் கல்பனா பெற்றார்.

கல்பனா சாவ்லாவுடன் பயணித்த 7 வீரர்கள், வெடித்துச் சிதறிய விண்கலம் : கோப்புப்படம்

முதல் விண்வெளிப்பயணத்தை முடித்த கல்பனா சாவ்லா, 2-வது பயணத்துக்கு தயாரானார். பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியபோது டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x