Last Updated : 10 Sep, 2020 11:52 AM

 

Published : 10 Sep 2020 11:52 AM
Last Updated : 10 Sep 2020 11:52 AM

மக்கள்தொகை குறைந்தாலும் 2100-ல் உலக மக்கள்தொகையில் இந்தியா முதலிடம்: ஐ.நா. அறிக்கை

உலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் 1,100 கோடியைத் தாண்டும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

சீனா, இந்தியா, அமெரிக்கா என்ற நிலை மாறி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை 2100-ல் பிடிக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் நைஜீரியா, சீனா இடம்பெறும். புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’, கடந்த ஜூலை மாதம் மக்கள்தொகை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு எதிரான தகவல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூற்றாண்டின் முடிவில் உலக மக்கள்தொகை எப்படியும் 1,100 கோடியைத் தாண்டும் என்று 2015-ம் ஆண்டிலேயே ஐ.நா. சபை கணித்தது. பிறகு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்விலும் உலக மக்கள்தொகை 1000 கோடிக்குக் குறையாது என்றே ஐ.நா. வாதிட்டது. இந்நிலையில் கரோனா பெருந்தொற்று காலத்தில் லான்செட் வெளியிட்ட ஆய்வறிக்கை சில மாதங்களுக்கு முன்னால் பேசுபொருளானது. மக்கள்தொகை, பிறப்பு விகிதம், தனிமனித ஆயுட்காலம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்த ஆய்வை லான்செட் வெளியிட்டது.

உலக மக்கள் தொகை 2100-ம் ஆண்டில் 10 சதவீத அளவில் குறையும் என்றது லான்செட் ஆய்வு. குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து, சீனா, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், தென்கொரியா, போர்ச்சுகல் உட்பட 20 நாடுகளில் மக்கள்தொகை 50 சதவீதம் அளவில் குறையும் என்றது. இதில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியில் இருந்து 109 கோடியாகக் குறையும். சீனாவின் மக்கள்தொகை 140 கோடியில் இருந்து 73 கோடியாகக் குறையும். அதே நேரம் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும் என்றது.

இப்படி இருக்க ஐ.நா. சபை, தற்போது மீண்டும் தன்னுடைய கணக்கெடுப்பை உறுதி செய்துள்ளது. தற்போது உலக மக்கள்தொகை 780 கோடியாக உள்ளது. ஐநாவின் ஆய்வுப்படி 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 805 கோடியாக அதிகரிக்கும். 2050-ம் ஆண்டில் 970 கோடியாக உயரும். 2100-ம் ஆண்டில் 1090 கோடியை எட்டும். இதில் சுவாரசியம் என்னவென்றால், லான்செட் ஆய்வு குறிப்பிட்டதைப் போலவே 2100-ல் இந்தியாவின் மக்கள்தொகை 109 கோடியாகக் குறையும் என்றுதான் ஐ.நா.வும் சொல்கிறது.

அதே போல சீனா மக்கள் தொகையும் 73 கோடியாகக் குறையும். தற்போது உள்ளதைக் காட்டிலும் நைஜீரியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணிசமாக அதிகரிக்கும். உலகின் முதல் 10 அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் இடம்பிடிக்கும். மொத்தத்தில் இந்தியா உலக மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடிக்கும். அதை அடுத்து நைஜீரியா இரண்டாவது இடத்தையும், சீனா மூன்றாவது இடத்தையும் பிடிக்கும்.

தனிமனித ஆயுட்காலம் உயரும். விளைவாக மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார்கள். அதேபோல மக்கள்தொகைப் நெருக்கத்தின் அளவீடும் மாறும். இதில் 2100-ம் ஆண்டு வாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு நைஜீரியாவில் 856.3 பேரும், இந்தியாவில் 331.6 பேரும், பாகிஸ்தானில் 281.2 பேரும் வசிக்கும் நிலை ஏற்படும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x