Published : 09 Sep 2020 07:54 AM
Last Updated : 09 Sep 2020 07:54 AM
உலகில் பல முன்னணி நாடுகளும் கரோனா வாக்சின் தயாரிப்பில் போட்டாப் போட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
கிட்டத்தட்ட அந்த தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார இணையதலமான ஸ்டாட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசியின் பாதுகாப்பு விவகாரத்தை முன்னிட்டு சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்த இணையதளம் ஆஸ்ட்ரா செனெகா நிறுவன செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டியுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு இந்த தடுப்பூசி வளர்ந்து வந்தது. இந்நிலையில் தீங்கான பக்கவிளைவு ரிப்போர்ட் ஆனதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்ன மாதிரியான பக்க விளைவு எப்போது இது ஏற்பட்டது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர் குணமடைந்து வருவதாகவும் ஸ்டாட் நியூஸ் இணையதளம் தெரிவிக்கிறது.
கரோனா வைரஸ் தடுப்பூசி அரசியல் காரணங்களினால் ஒரு அவசரகதியை எட்டுவது நடந்து வருகிறது, இப்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதையடுத்து மற்ற வாக்சின் தயாரிப்பாளர்களும் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த உறுதி பூண்டுள்ளனர்.
ஆஸ்ட்ராசெனெகா, ஃபைசர், கிளாக்சோ ஸ்மித்கிளைன் உள்ளிட்ட தடுபூசி தயாரிப்பு மருந்து நிறுவனங்கள், அரசியல் நெருக்கடியிலும் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுள்ளன.
இந்த உறுதி மொழியை ஏற்ற மற்ற நிறுவனங்கள், ஜான்சன் & ஜான்சன், மெர்க், மாடர்னா, நொவாவாக்ஸ், சனோஃபி, பயோ என் டெக் ஆகிய நிறுவனங்களும் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்றுள்ளன.
முதல் 2 கட்ட சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்த ஆக்ஸ்போர்டு கரோனா தடுப்பூசி யுஎஸ், பிரேசில், யுகே, தென் ஆப்பிரிக்கா உட்பட 30,000 பங்கெற்பாளருக்கு சோதனை செய்யும் 3ம் கட்ட சோதனை நிலைக்கு வந்ததையடுத்து இந்த வாக்சின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
உலகச் சுகாதார அமைப்பின் தகவலின் படி சுமார் 180 தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன, ஆனால் இவை எதுவும் கிளினிக்கல் சோதனைக்கு இன்னமும் உட்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ‘விளக்க முடியா பக்க விளைவு’ ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனெகா கூறியிருப்பதாக ஸ்டாட் நியூஸ் தெரிவிக்கிறது.
இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இரட்டைத் தடுப்பு கூறுகள் கொண்டது என்று கூறப்படுகிறது, அதாவது கிருமி எதிர்ப்பான்களை உற்பத்தி செய்வதோடு வைரஸ் அழிப்பு டி-செல்களையும் உற்பத்தி செய்கிறது என்று ஆரம்பக்கட்டத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT