Published : 02 Sep 2015 12:57 PM
Last Updated : 02 Sep 2015 12:57 PM
உலகளவில் 90% கடற்பறவைகளின் வயிற்றுக்குள் சிறிதளவாவது பிளாஸ்டிக் இருப்பதை குறிப்பிட்டு பிளாஸ்டிக் மாசு அபாயத்தை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் குழு மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாகியுள்ளது.
அந்த ஆய்வுக் கட்டுரையில் ஆஸ்திரேலிய காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் மூத்த விஞ்ஞானி கிறிஸ் வில்காக்ஸ் கூறும்போது, "சுமார் 90 சதவீதம் அதாவது 10 கடற்பறவைகளில் 9 பறவைகள் பிளாஸ்டிக்கை உண்டுள்ளது தெரிகிறது. மிகப் பெரிய அளவில் பிளாஸ்டிக் மாசு நிலவுவதை மிகவும் அழுத்தமாக கூறுகிறது எங்களது ஆய்வு முடிவு.
உலக மக்களின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பிரச்சினை முடிவில்லாமல் இருக்கப்போவது நிச்சயமான உண்மை. இறந்த பறவைகளின் குடல்களில் நாங்கள் பெருமாலும் பிளாஸ்டிக் இருப்பதைப் பார்க்கிறோம்.
எங்களது ஆய்வு அரை நூற்றாண்டாக நடந்து வருகிறது. 1960 ஆம் அண்டு 5 சதவீத கடல்பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாக கூறப்பட்டது. இந்த சதவீதம் 2010 ஆண்டு 80 சதவீத கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தற்போது இருக்கும் நிலவரப்படி 2050ம் ஆண்டில், 99% கடல் பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் இருக்கும்.
மொத்தமாக கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களின் அளவு வருடத்துக்கு எட்டு மில்லியன் டன்களாக தற்போதைய நிலவரப்படி அதிகரித்துவிட்டது" என்ற அதிர்ச்சிகரத் தகவல் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கடலில் கழிவுகளாக கலக்கின்றது. கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உணவுப் பொருட்கள் என எண்ணி பறவைகள் உட்கொள்வதாகவும் இதனை தடுக்க கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்து அவசர நடவடிக்கையை மேற்கொள்ள உலக நாடுகள் முன்வரவேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT