Published : 10 Sep 2015 02:44 PM
Last Updated : 10 Sep 2015 02:44 PM
உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா?
இதோ அதற்கான பின்னணி..
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகளில் எரித்திரியாவும் ஒன்று. எதியோபியாவுடன் ஒன்றிணைந்து இருந்த எரித்திரியா கடந்த 1993-ல் தான் தனிநாடாக ஆனது. அன்று முதல் அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் இசாயஸ் அஃபேவெர்கி. இவர்தான் அந்நாட்டு அதிபர். எரித்திரியாவைப் பொருத்தவரை அனைத்து அதிகாரங்களும் அதிபரிடமே குவிந்து கிடக்கின்றன.
இத்தகைய சர்வாதிகார போக்கால் மக்கள் அனைவரும் அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர். எரித்திரிய மக்கள் நிரந்தரமாக ஒருவித பதற்றமான சூழலில் சிக்கியுள்ளனர் என்றே கூறவேண்டும்.
எரித்திரியாவில் ஒரே ஒரு கட்சிதான் உள்ளது. அங்கு இதுவரை ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்ததில்லை. நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லை. குடிமக்கள் எண்ணிலடங்கா கொடுமைக்குள்ளாகியுள்ளனர். வருடக் கணக்கில் ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படும் மக்கள் அதன்பிறகும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ராணுவ பணிக்குப் பின்னர் அரசு அடிமைகளாக்கப்படுகின்றனர். சரியான காரணம் இல்லாமலேயே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதானவர்களுக்கு நேரும் கொடுமை வார்த்தைகளால் சொல்லி மாளாது.
இதற்கெல்லாம் மேலாக, அதிபர் இசாயாஸ் அல் காய்தா, அல் ஷெபாப் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறார் என்பதே அந்நாட்டு மக்கள் முன்வைக்கும் மிகப் பெரிய குற்றச்சாட்டு.
இத்தகைய நிலையற்ற சூழலில் அந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. இதனால், மக்கள் வாடி வருகின்றனர். வறுமையில் வாரும் எரித்திரிய மக்களுக்கு வெளிநாட்டினர் நீட்டும் உதவிக்கரத்தை அதிபர் இசாயாஸ் ஏற்பதாகயில்லை. இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக எரித்திரியாவில் இருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தயாராகும் அகதிகள்:
இராக், சிரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியாவை அடுத்து எரித்திரியா நாட்டில் இருந்தே அதிக அளவில் மக்கள் அகதிகளாக வெளியேறி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களும் அடைக்கலம் தேடுவது ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான்.
ஆம், தயாராகிவிட்டார்கள் இந்த அகதிகள். புகலிடம் தேடும் அவர்கள் பயணம் எரித்திரியாவில் இருந்து சூடான் வழியாக லிபியாவைக் கடந்து கடல் பரப்புக்கு வருகிறது. அங்கிருந்து கள்ளத் தோணிகள் மூலம் ஐரோப்பிய யூனியன் நாடுகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர், கரை ஒதுங்கவோ அல்லது கரை சேரவோ எனத் தெரியாமலேயே!
சில புள்ளி விவரங்கள்:
4,00,000- இது கடந்த 2014-ம் ஆண்டில் எரித்திரியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை. |
2,16,453- இது சூடான், எதியோபியாவில் தஞ்சம் புகுந்துள்ள எரித்திரியர்கள் எண்ணிக்கை. |
5,000- இது ஒவ்வோர் மாதமும் எரித்திரியாவில் இருந்து வெளியேறும் மக்கள் எண்ணிக்கை. |
26,700- கடல்வழியாக இந்த ஆண்டு ஐரோப்பியாவுக்குள் நுழைந்த 3,81,412 அகதிகளில் 26,700 பேர் எரித்திரியாவைச் சேர்ந்தவர்களாவர். |
3,394- கடந்த 2014-ம் ஆண்டு கடல் வழியாக இத்தாலிக்கு தஞ்சம் தேடி வந்த ஆதரவற்ற குழந்தைகள் 13,000 பேரில் 3,394 குழந்தைகள் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள். |
3,239- கடந்த 2014-ம் ஆண்டு மிகவும் ஆபத்தான பயணத்துக்குப் பின்னர் பிரிட்டனை அடைந்த எரித்திரியர்களின் எண்ணிக்கையே இது. |
27%- இத்தாலிக்கு கடந்த 2014-ம் ஆண்டு தஞ்சம் தேடி வந்த 1,21,000 பேரில் 27% பேர் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள். |
90%- ஐரோப்பிய யூனியன் பிரதேச நாடுகளில் தஞ்சம் கோரிய 90% எரித்திரிய மக்களுக்கு தஞ்சம் கிடைத்துள்ளது. |
9%- 2015-ம் ஆண்டில் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோரிய எரித்திரியர்களில் 9% பேர் துணையற்றவர்கள் அல்லது ஆதரவற்ற குழந்தைகள். |
15%- ஐரோப்பியாவில் தஞ்சம் புகுந்த 6,700 ஆதரவற்ற குழந்தைகளில் 15% எரித்திரியா நாட்டுக் குழந்தைகள் |
2%- வெளிநாடுகளில் வாழும் எரித்திரியர்கள் மீது 2% வருமான வரி விதித்துள்ளது அந்நாடு. |
87%- பிரிட்டனில் வாழும் உரிமை கோரிய எரித்திரிய மக்களில் 87% பேருக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. |
ஐரோப்பிய நாடுகளில் வாழும் எரித்திரியர்கள் சதவீத்ம்:
ஜெர்மனி | 40% |
பிரிட்டன் | 22% |
ஸ்வீடன் | 18% |
பிரான்ஸ் | 7% |
நெதர்லாந்து | 4% |
பிற நாடுகள் | 9% |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT