Last Updated : 16 Sep, 2015 10:46 AM

 

Published : 16 Sep 2015 10:46 AM
Last Updated : 16 Sep 2015 10:46 AM

தவிக்கும் தாய்லாந்து - 10

சுகோதாய் என்றும் சயாம் என்றும் பெயர் சூட்டிக் கொண் டிருந்த நாட்டின் தற்போதைய பெயர்தான் தாய்லாந்து.

பெயரைக் கொண்டு ‘’ஆஹா அன்னைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது இந்த நாடு’’ என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. தாய் என்பது அங்கு பேசப்படும் மொழியின் பெயர். ஒரு காலத்தில் அதன் மத்திய சமவெளியில் இருந்த இனக்குழுவின் பெயராகவும் இருந்திருக்கலாம் என்கிறார்கள். தாய் என்பதற்கு மக்கள் என்று சிலரும், விடுதலை என்று சிலரும் அந்த மொழியில் அர்த்தமாகிறது என்று கூறுகிறார்கள். நாட்டில் 95 சதவீதம்பேர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்களின் மொழி ‘தாய்’. 85 சதவீத மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பது நிறைவான விஷயம்.

ஆனால் கடைகளில் பேரம் பேசுவது வித்தியாசமான அனுபவம். கடைக்கார்களால் (பலரும் இளம் பெண்கள்) ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மிக மெதுவாகத்தான் பேசுகிறார்கள். கையில் தயாராக இருக்கும் சிலேட்டுப் பலகையில் விலையை எழுதிக் காட்டுவதன் மூலம் பேரத்தைத் தொடர்கிறார்கள். கடைகளில் மட்டுமல்ல கல்வி, மருத்துவம் என்று பல துறைகளிலும் தாய்லாந்தில் பெண்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.

பிரதமர் மற்றும் நீதித் துறையிடம் என்னவிதமான ‘பேரத்தைப்’ பேசி மன்னர் தங்கள் நாட்டை மீட்கப் போகிறார் என்பதைக் காண மக்கள் ஆவலாக உள்ளனர்.

தனிப்பட்ட முறையில் பல திறமைகளைக் கொண்டவர் மன்னர் பூமிபோல். 1967-ல் நடைபெற்ற நான்காவது தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகளில் பாய்மரக் கப்பல் பந்தயத்தில் முதலிடம் பெற்றார். படகுகள் உருவாக்குவதில் தனித்திறமை பெற்றவர். சிறு பாய்மரப் படகு களை பலவித டிசைன்களில் உருவாக்கியவர். தனது சில கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை கூட பெற்றிருக்கிறார். வீணாகும் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடிய கருவி, செயற்கை மழையை உருவாக்குவதில் புதிய முறை போன்றவற்றிற்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.

2006-ல் தேர்தல் நடப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சிகள் மன்னர் பூமிபோலிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தன. “தேர்தலுக்குப் பதிலாக நீங்களே அடுத்த பிரதமரை நியமித்துவிடுங்கள்’’ என்று. மன்னர் மறுத்தார். “இது ஜனநாயகத்துக்கு எதிரானது. மன்னர் பிரதமரை நியமிப்பது என்பது பகுத்தறிவுக்கு உட்படாததுகூட’’ என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தக்ஸின் மீண்டும் வென்றார். அதன் பின்னர் மன்னரோடு தனிமையில் எதையோ பேசினார். சில மணி நேரங்களுக்குப் பிறகு “நான் அரசியலிலிருந்து கொஞ்ச காலத்துக்கு ஓய்வெடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.

மன்னர் பூமிபோல் தொலைக் காட்சியில் தோன்றினார். “தற்போதைய அரசியல் சிக்கலைத் தீர்க்க வேண்டுமென்று நீதிபதிகளைக் கேட்டுக்கொள் கிறேன்’’ என்றார்.

இங்லக் ஷினவத்ரா என்பவர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக விளங்கியவர். 2011 ஆகஸ்ட் 5 அன்று பிரதமரானார். இவர் முன்னாள் பிரதமர் தக்ஸினின் தங்கை. ஆனால் மே 20 2014 அன்று இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. என்ன வழக்கம் போல ராணுவப் புரட்சியா என்றால் இது கொஞ்சம் மாறுபட்டது. தாய்லாந்து இனி ராணுவத்தால் ஆட்சி செய்யப்படும் என்று நீதிமன்றமே அறிவித்த விநோதம் நடந்தேறியது.

எதற்காக இப்படி ஒரு தீர்ப்பு?. ''அரசுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் செயல்படுபவர்களால் உண்டாகக் கூடிய வன்முறையைத் தடுத்து நிறுத்த'' என்கிறது நீதிமன்றம். தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் பிரதமர் என்கிறது நீதிமன்றம்.

என்ன தவறு செய்தார்? ஏற்கனவே இருந்த தாய்லாந்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் எதிர்க்கட்சி ஆதரவு பெற்றவர். எனவே தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவரை மாற்றி வேறொருவரை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்தார் இங்லக். இதுதான் அதிகார துஷ்பிர யோகம்! இத்தனைக்கும் பிரதமர் செய்தது சட்டமீறல் அல்ல. என்றாலும் ராணுவம் அங்கே அரசாளத் தொடங்கி விட்டது. தற்போது தாற்காலிகப் பிரதமராக பொறுப்பேற்றிருப்பவர் நிவதும் ராங் பூன்சங்பைசன் என்பவர்.

எனினும் மன்னர் பதவி சிக்கலின்றி தொடர்கிறது. தற்போது அவருக்கு வயது 88.

மீண்டும் ஜனநாயகம் மலரும் என்று ராணுவத் தளபதி ப்ரையுத் கூறுகிறார். என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(உலகம் உருளும்)





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x