Published : 02 Sep 2020 05:22 PM
Last Updated : 02 Sep 2020 05:22 PM
அனைத்து நாடுகளின் விமானங்களும் தங்களின் வான் எல்லையில் பறந்து ஐக்கிய அரபு அமீரகத்தை அடைவதற்கு சவுதி அரேபிய அரசு இன்று அனுமதியளித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிலிருந்து முதல் வர்த்தக சேவை விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இயக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பை சவுதி அரேபிய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஆனால், சவுதி அரேபியாவின் வைரிகளான ஈரான், கத்தார் ஆகிய நாடுகளின் விமானங்கள் வான் எல்லையில் பறக்க அனுமதியிருக்கிறதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே விமானப் போக்குவரத்துச் சேவை தொடங்கியுள்ள நிலையில் இனி சவுதி அரேபிய வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஐக்கிய அரபு அமீரக அரசு தங்கள் நாட்டிலிருந்து விமானங்கள் பறக்கவும், வரவும் வான் எல்லையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரி வேண்டுகோள் விடுத்ததால், சவுதி அரேபியா அனுமதியளித்துள்ளது என சவுதி பிரஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வாரத்தில், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரட் குஷ்னர், மூத்த ஆலோசகர், இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குத் தனி விமானத்தில் பயணித்து பயணிகள் விமானச் சேவையைத் தொடங்கி வைத்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேல் நாட்டிலிருந்து விமானங்களும், மற்ற நாடுகளின் பயணிகள் விமானங்களும் நேரடியாக அபுதாபி, துபாய்க்கு இயக்கலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், நெதன்யாகுவின் பேச்சில், சவுதி அரேபியாவுக்கு விமானச் சேவை இயக்கப்படுமா எனத் தெரிவிக்கவில்லை. ஆனால், அந்நாட்டின் வான்வழியைக் பயன்படுத்திக் கொள்ளப்போவது குறித்துத் தெரிவித்தார்.
சவுதி அரேபியா தங்கள் வான் வழியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பதன் மூலம் பயண நேரம் குறையும், சுற்றுலா வேகமாக வளர்ச்சி அடையும். பொருளாதாரம் வளரும். உண்மையான அமைதி வளர்கிறது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT