Last Updated : 04 Sep, 2015 12:32 PM

 

Published : 04 Sep 2015 12:32 PM
Last Updated : 04 Sep 2015 12:32 PM

உலகை உலுக்கிய சிரிய குழந்தையின் இறுதி பயணம்

துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துருக்கியிலிருந்து கிரீஸை அடைய முயன்ற சிரிய நாட்டவர் சென்ற படகுகள் மூழ்கியதால் இந்தச் சிறுவன் உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஐரோப்பாவில் எங்கேனும் தஞ்சம் அடைய ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அவர்களது உடல்கள் தற்போது மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது.

துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், உலக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த நாடுகளின் அலட்சியப் போக்கையும் கை உயர்த்தி கேள்வி கேட்கும் வகையில் அமைந்துவிட்டது.

சர்வதேச அளவில் தற்போது பேசப்பட்டு வரும் அந்தக் குழந்தையின் பெயர் ஏலான்(3), சிரியாவின் கொபானியை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. ஏலான், அவரது தாய் ரேஹன், சகோதரர் காலிப், தந்தை அப்துல்லா மற்றும் சில குழந்தைகள் உள்பட 12 பேர் அந்த படகில் கீரீஸை அடைவதற்காக சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே இதே போல பயணத்தை மேற்கொள்ள தரகர்களிடம் ரொக்கப் பணத்தை அளித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்தவர்கள்.

பின்னர் அவர்களே படகை ஏற்பாடு செய்து கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அந்த கோர விபத்து நேர்ந்தது.

வாழ்விடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்களோடு படகில் வந்த ஏலானின் தந்தை அப்துல்லா குர்தி மட்டும் அதில் உயிர் பிழைத்துள்ளார். கரையொதுங்கி அவரது குடும்பத்தினரது உடல்களை அவரிடம் கொண்டு சேர்க்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

இதனிடையே சிறுவன் ஆலனின் தந்தை அப்துல்லாவிடம் சிரியாவில் வெளியாகும் ஹூரியத் பத்திரிகை பேட்டிக் கண்டுள்ளது. அப்போது அவர்களிடம் பேசுவதற்கு முன்னர் கதறி அழுத அப்துல்லா பின்னர் தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு அந்த மோசமான தருணத்தை விவரித்துள்ளார்.

"அப்போது நான் என் மனைவி மற்றும் குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டிருந்தேன். பயங்கர காற்றில் படகு மெல்ல மூழ்க தொடங்கியது. அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். செய்வதற்கு ஒன்றுமில்லாத சூழல். இருள் மட்டுமே எங்களோடு இருந்தது. நான் கையில் பிடித்துகொண்டிருந்த எனது 2 குழந்தைகளும் கை நழுவினர்.

அனைவரும் கதறினோம். என் குடும்பத்தினர் பெயர்களைக் கூறி நான் கத்தியபோது, எனது குரல் அவர்களை சென்றடையவில்லை" என்று கூறி முடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x