Published : 23 Sep 2015 08:31 PM
Last Updated : 23 Sep 2015 08:31 PM
அமெரிக்காவிலேயே முதன்முறையாக நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு முஸ்லிம்களின் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் மாகாணத்தில் உள்ள 1,800 பள்ளிகள் வியாழக்கிழமை மூடப்பட்டிருக்கும். சுமார் 11 லட்சம் மாணவர்கள் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு யாம் கிப்புர் எனப்படும் யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு புதனன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் நகரில் இருந்த உலக வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானம் மூலம் தகர்த்தனர். இதையடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணம் வளர்ந்து வருவதாக அமெரிக்கவாழ் முஸ்லிம்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு சிறியதாக இருந்தாலும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜமைக்கா முஸ்லிம் மையத்தின் இயக்குநர் இமாம் ஷம்சி அலி கூறும்போது, “இமாம் என்ற முறையிலும் பெற்றோர் என்ற வகையிலும் பக்ரித் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இத்தகைய கொள்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான ஒரு உணர்வை அளிக்க வகை செய்யும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT