Published : 24 Aug 2020 10:20 AM
Last Updated : 24 Aug 2020 10:20 AM
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகிரத்து வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அதிபர் ட்ரம்ப் அவசரகால அனுமதி அளித்துள்ளார்.
பிளாஸ்மா சிகிச்சைக்கு அதிபர் ட்ரம்ப் அனுமதியளித்தது அமெரிக்காவில் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்தும் மைல்கல்லாக அமையும் என அவரின் ஆதரவாளர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதை முழுமையாகக் கொண்டாடுவதற்கு முன் அதிகமான ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்களில் ஒருதரப்பினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையவில்லை. இதுவரை 57 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் நிலையில், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல், தடுக்கும் வழிகளை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் அதிபர் ட்ரம்ப்புக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பளார் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, பில் கிளிண்டன் ஆகியோர் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது குறித்துக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் கரோனா நோயாளிகளுக்குப் பிளாஸ்மா சிகிச்சை வழங்க அதிபர் ட்ரம்ப் அவசர அனுமதி அளித்துள்ளார்.
இது, கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் உள்ள ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை எடுத்து, நோயுற்றவர்கள் உடலில் செலுத்தி கரோனாவிலிருந்து குணப்படுத்தும் சிகிச்சையாகும். பல்வேறு நாடுகளில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்து செயல்படுத்தி வரும் நிலையில், சில நாடுகள் இதைச் செயல்படுத்தத் தயங்குகின்றன.
ஆனால், பிளாஸ்மா சிகிச்சை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் செய்யப்பட்டு வந்தாலும், இது முழுமையாக வெற்றியைத் தருகிறதா என்பது குறித்த தகவல் இல்லை.
இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைமை விஞ்ஞானி டெனிஸ் ஹின்டன் கூறுகையில், “கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் புதிய வகை சிகிச்சையாக பிளாஸ்மா சிகிச்சையைக் கருதக்கூடாது.
ஏற்கெனவே நடைமுறையில் இருந்தாலும், முழுமையாகச் செயல்படுத்த இன்னும் ஏராளமான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. முறையான கிளினிக்கல் பரிசோதனை முடிவு வரும் நாட்களில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (எப்டிஏ) அதிகாரிகள் வேண்டுமென்றே பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்தார்கள். அரசியல் பின்னணியுடன் செயல்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள எப்டிஏ அதிகாரிகள், ''எப்டிஏ அதிகாரிகளையும், அமைப்பையும் தவறாக நினைத்து அவர்களை அதிபர் அவமானப்படுத்துகிறார். எப்டிஏ அமைப்பின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறார். பிளாஸ்மா சிகிச்சை உறுதியான சிகிச்சையாக இருக்கலாம். ஆனால், எந்த அளவுக்கு முழுமையானது எனத் தெரியாது.
இதுவரை 70 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் குணமடைந்துள்ளார்கள். பலர் குணமடைந்து புதிய நோய்க்கு ஆட்பட்டுள்ளார்கள். ஆதலால், தீவிரமான ஆய்வு அவசியம்'' எனத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT