Published : 24 Aug 2020 07:15 AM
Last Updated : 24 Aug 2020 07:15 AM
நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒளி தலைமையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. சர்மா ஒளியின் ஆதரவுடன் நேபாளத்தில் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது.
மெதுமெதுவாகவும், படிப்படியாகவும் நேபாளத்தின் 7 மாவட்டங்களில் உள்ள பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இத்தகவலை நேபாள வேளாண் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சர்வே மற்றும் வரைபடத் துறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இந்தத் துறை கூறியுள்ள புள்ளிவிவரங்களை விடவும் அதிகளவில் நேபாள பகுதிகளை சீனா ஆக்கிரமித்திருக்க கூடும். சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் பகைத்துக் கொள்ள விரும்பாத சர்மா ஒளி, ஆக்கிரமிப்பைப் பற்றி கண்டும் காணாமலும் இருக்கிறார்.
டோலக்கா, கூர்க்கா, தர்சுலா, ஹம்லா, சிந்துபால்சவுக், சன்குவசபா, ருசுவா ஆகிய 7 மாவட்டங்களில் பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 1,500 மீட்டர் தூரத்துக்கு நேபாளத்தின் டோலக்கா வரை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று வேளாண் அமைச்சகத்தின் சர்வே துறை புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
மேற்கூறிய பகுதிகளை எல்லாம் ஆக்கிரமித்த பிறகு, அவற்றை சீனாவின் தன்னாட்சி திபெத் பகுதிக்குள் கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சேர்த்துவிட்டது.
இதைவிட மிக முக்கியமாக நேபாளத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகள், நதிகள் உள்ள பல பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வேளாண் துறை நேபாள அரசை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ், ‘‘நேபாளத்தின் நிலப்பகுதிகளை சீனாவிடம் இருந்து பிரதமர் சர்மா ஒளியின் அரசு மீட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் தீர்மானம் கொண்டு வந்தது. டோலக்கா உட்பட நேபாளத்தின் 7 மாவட்டங்களில் 64 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
நேபாளத்துக்கும் - சீனாவுக்கும் இடையில் 1,414.88 கி.மீ. தூரத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் மொத்தம் உள்ள 98 எல்லை தூண்களில் பல தூண்கள் காணாமல் போய்விட்டதாகவும் பல தூண்கள், நேபாள பகுதிக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாள காங்கிரஸ் கூறிவருகிறது. சமீப காலமாக நேபாள அரசு எடுக்கும் முடிவுகளில் சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நேபாள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமராக உள்ள சர்மா ஒளிக்கும், நேபாள காங்கிரஸ் கட்சியின் பிரசந்தாவுக்கும் உள்ள வேறுபாடுகளை தீர்த்து வைக்க, நேபாளத்துக்கான சீன தூதர் சமீபத்தில் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். எனினும், பிரதமர் சர்மா ஒளிக்கு நேபாளத்தில் எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT