Published : 21 Aug 2020 08:28 AM
Last Updated : 21 Aug 2020 08:28 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தமிழகத்தின் பூர்வீகத்தை என்பதை மறக்காமல், ‘சித்தி’ எனும் தமிழ்வார்த்தையை பிரதானப் பேச்சில் பயன்படுத்தியது அமெரிக்க மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை,தாய், என்று கேட்டுப்பழக்கப்பட்டிருந்த அமெரிக்க மக்களுக்கும், அங்கு வசிக்கும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் 'சித்தி' எனும் வார்தத்தை புதிதாகத் தெரிந்தது. இதனால் உலக அரசியலில் 'சித்தி' எனும் வார்த்தை மிகப்பெரிய தேடுபொருளாக மாறியது.
அமெரிக்க மக்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பலரும் கமலா ஹாரிஸ் உச்சரித்த 'சித்தி' எனும் வார்த்தைக்கு கூகுளில் அர்த்தம் என்ன என்பதைத் தேடத்தொடங்கியதால் அந்த வார்த்தை வைரலானது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரும், ஆப்பிரிக்க அமெரிக்கருமான கமலா ஹாரிஸ் முறைப்படி புதன்கிழமை அறிவிக்கப்பட்டார்.
ஜனநாயகக் கட்சி சார்பில் தான் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் அமெரிக்கத் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, ஆப்பிரிக்க அமெரிக்க பெண் எனும் புதிய வரலாற்றைப் படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் பேசும் போது தனது தாய் ஷியமளா கோபாலானை நினைவு கூர்ந்தார். கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்காநாடு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிஸ் பேசுகையில் “ என்னையும், என் சகோதரரியைும் வலிமயைான கறுப்பினப் பெண்ணாக, துணிச்சல் மிக்க பெண்ணாக வளர்த்தது எனது தாய் ஷியாமலாதான். இந்தியக் கலாச்சாரத்தை எப்போதும் எங்களுக்கு நினைவூட்டி, அதைக் கற்றுக்கொடுத்து எனது தாய் வளர்த்தார்.
எனக்கு என் தாய் முதலில் குடும்பம்தான் முக்கியம் என்று சொல்லிக் கொடுத்தார். இந்த குடும்பத்தால்தான் நீ பிறந்தார், இந்த குடும்பம்தான் உன்னை தேர்ந்தெடுத்தது என்று அடிக்கடி கூறுவார். என்னுடைய குடும்பத்தில் என்னுடைய அங்கிள், ஆன்ட்டி, 'சித்திக்கள்' அனைவரும் அடங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதில் கமலா ஹாரிஸ் கடைசியில் உச்சரித்த 'சித்தி' எனும் வார்த்தை ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் இதுவரை அறியாத வார்த்தையாக இருந்தது. சித்தி எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம், ஆன்ட்டி, அங்கிள் கேள்விப்பட்டிருக்கிறோம் 'சித்தி' என்றால் என்ன என கூகுளில் அர்த்தம் தேடத் தொடங்கியதால் வைரலானது.
கமலா ஹாரிஸ் பேசிய 'சித்தி' எனும் தமிழ்வார்த்தைக்கு அமெரிக்காவில் உள்ள முக்கியமான தமிழர்கள் பெரும் வரவேற்பு அளித்து, மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிபர் ஒபாமாவின் வெள்ளைமாளிகை அதிகாரி கவுதம் ராகவன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எங்கு பார்த்தாலும் அமெரி்க்கர்கள் 'சித்தி' வார்த்தைக்கு அர்த்தம் தேடி வருகிறார்கள். ஆனால், கமலா ஹாரிஸை எங்களுக்குத் தெரியும். அவர் மீது அன்பு செலுத்துகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
தொழிலதிபரும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான பத்மா லட்சுமி கூறுகையில் “ கமலா ஹாரிஸ் பேச்சைக் கேட்டு என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. முழுமையாக என் மனது நிறைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் தற்போது 2.40 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகை மிண்டி காலிங், பிரமிளா ஜெயபால் உள்ளிட்டவர்கள் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT