Published : 19 Aug 2020 10:22 AM
Last Updated : 19 Aug 2020 10:22 AM
சீனாவின் பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகப் பதற்றங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்ப இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சினைகளைத் தூண்டுவது மற்றும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை சீன அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கிறார் என விமர்சித்த கட்சி நிர்வாகியை சீன கம்யூனிஸ்ட் அரசு கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகியும், சென்ட்ரல் பார்டி ஸ்கூலின் முன்னாள் பேரிசிரியையுமான காய் சியா என்பவரைத்தான் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.
நாட்டின் மதிப்பைக் குலைக்கும் வகையில் நாளேட்டில் பேட்டி அளித்தமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, 68 வயதாகும் காய் சியாவுக்கு அளித்துள்ள நோட்டீஸில் “ காய் சியா பேசியவை தீவிரமான அரசியல் பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது. இயல்புக்கு மாறான பேச்சு, நம்முடைய கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறி பேசியுள்ளீர்கள் ஆதலால், கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பேராசிரியை காய் சியா, தற்போது சீனாவில் இல்லை, அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பதால், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், மேற்கொண்டு எதும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் ஊடகங்களிடம் காய்சியா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பிரிட்டனின் கார்டியன் நாளேட்டுக்கு காய் சியா பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்தப் பேட்டியில் காய் சியா கூறுகையில் “ சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்நாட்டு பொருளாதாரப்பிரச்சினைகள், சமூகரீதியான பதற்றங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்தியாவுடன் மோதல் போக்கையும், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் எதிரான நிலையை எடுப்பதின் மூலம் தன்னுடைய நிலையை கட்சியில் தக்க வைக்க முடியும், அதிகாரத்தை வலுப்படுத்த முடியும் என ஜின்பிங் நம்புகிறார் எனத் தெரிவித்தார்.
உலகின் எதிரியாக சீனாவை உருவாக்குவதில் என்ன பயன்? பிரச்சினைகளை உண்டாக்குவதால் ஜின்பிங்கிற்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு காய் சியா அளித்த பதிலில், “ சீனாவில் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக ஜின்பிங் கட்சியில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை இழந்துவிடக்கூடாது, அதிகாரத்தை வலுப்படுத்தவும் இவ்வாறு செய்கிறார்.
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிக் குறைவாலும், சமூகத்தினருக்கு இடையே மோதலும் இருந்துவருகிறது. இதிலிருந்து மக்களை திசைதிருப்ப, இந்தியாவுடன் திடீர் மோதல் போக்கை, குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் மோதல் போன்றவற்றை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் பரப்புதலையும் செய்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தில்திருத்தம் செய்து அதிபராக 2முறை மட்டுமே வரமுடியும் என்பதை ஜின்பிங் திருத்தி, வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கலாம் எனக் கொண்டுவந்தார்.
கரோனாவில் சீனாவில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற உண்மையான விவரங்கள் வெளி உலகிற்கு சொல்லப்படாமல் மறைக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவலை முறையாகக் கட்டுப்படுத்த முடியாமல் ஜனவரி 7-ம் தேதிக்குதான் உலகிற்கு ஜின்பிங் அறிவித்தார்.
சீனா அழிவை நோக்கிச் செல்கிறது. ஏனென்றால் மக்கள் உண்மையைப் பேச முடியாது.
இவ்வாறு காய் சியா தெரிவித்திருந்தார்.
காய் சியா அளித்த இந்தபேட்டியால்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT