Published : 18 Aug 2020 07:05 PM
Last Updated : 18 Aug 2020 07:05 PM

கமலா ஹாரிஸ் ஓர் இந்தியப் பெருமிதம்!- ஹாலிவுட் தயாரிப்பாளர் டெல்.கே.கணேசன் பேட்டி

டெல் கே.கணேசன் - கமலா ஹாரிஸைச் சந்தித்தபோது

கரோனாவால் பெரும் இழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் அமெரிக்காவில், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியின் ஆட்சியின் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட ஊழிக்காலத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலும் வந்துவிட்டது. எதிர்வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்க்கும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வலுவான போட்டியாளராகக் களம் காண்கிறார்.

அதிபருக்கான வேட்பாளர்களைப் போலவே துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களும் சர்வதேச கவனத்தைப் பெறக்கூடியவர்கள். தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கும் கமலா தேவி ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபருக்கான வேட்பாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓர் இந்தியர். முக்கியமாக அவர் சென்னைவாசி.

கமலா ஹாரிஸ் துணை அதிபருக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்காவில் வாழும் இளம் பெண்களுக்கும், நிறத்தால், குடியுரிமையால் நிராகரிக்கப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதர்களுக்கும் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அவரைச் சமீபத்தில் சந்தித்து உரையாடி இருக்கிறார், ஹாலிவுட்டில் தொடர்ச்சியாகத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டுவரும் தமிழகத் தமிழரான டெல்.கே.கணேசன். கமலா ஹாரிஸைச் சந்தித்தது பற்றி அவரிடம் கேட்டபோது,

முதல் இந்தியப் பெண்
“தற்போதைய துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் போட்டியாளர் கமலா தேவி ஹாரிஸ் சிறந்த அரசியல்வாதி. அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதல் முறையாக துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் முதல் இந்தியப் பெண் மற்றும் அமெரிக்கரல்லாதவர். இந்திய, ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர் என்னும் சாதனையைப் படைத்துள்ளார். அமெரிக்க - இந்திய சமூகத்தில் கமலா தேவி ஹாரிஸுக்குப் பெரும் ஆதரவு இருக்கிறது என்பது வெளிப்படையானது. கமலா ஹாரிஸின் கள அரசியலும் கடும் உழைப்பும்தான் இந்தச் சாதனையை அவர் எட்டக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் வாழும் இளம் பெண்களுக்கும், நிறத்தால், புலம்பெயர்வால் உரிமைகள் மறுக்கப்படும் மனிதர்களுக்கும் பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது”என்கிறார்.

கமலா தேவி ஹாரிஸை அவரின் தேர்தல் பிரச்சராத்தின்போது மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரத்தில் சந்தித்ததை நினைவு கூறும் டெல்.கே.கணேசன். “கமலா ஹாரிஸ் மிகச்சிறந்த நற்குணங்கள் கொண்டவர், உற்சாகம் மிகுந்த, நேர்மறை எண்ணங்களைக் கொண்டவர், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் அதைப் பரப்புபவர். சந்தித்த நொடியிலேயே மிகுந்த நட்புடன் பழகினார். அவருடன் பேசியது சிறிது நேரமே என்றாலும் பக்கத்து வீட்டு நண்பருடன் உறவாடியது போன்றே இருந்தது. எனது தாயாரும், கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளாவும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டார்கள். எனவே நாங்கள் பேசியபோது தமிழில் வணக்கம், நன்றி என்றே பேசிக்கொண்டோம். சாம்பார், அரிசி சாதம் பற்றிப் பேசிச் சிரித்தோம்” என்கிறார்.

கமலா ஹாரிஸ் வளர்ந்த பின்னணி
அவரிடம் கமலா ஹாரிஸ் அமெரிக்க அரசியலில் வளர்ந்த பின்னணியைப் பற்றிக் கேட்டபோது, “கமலா ஹாரிஸ் தன்னைக் கருப்பினப் பெண்ணாகத்தான் நினைத்து கொள்கிறார். அவர் தனது பூர்வீகம் பற்றியும் சென்னை பற்றியும் குறிப்பிட்டார். உலகம் முழுதும் சுற்றி உலக மேம்பாடு சம்பந்தமாக வேலை பார்த்த அவர், மீண்டும் தன் கிராமத்திற்குச் சென்று, 90-களின் மையத்தில் இந்தியாவில் வாழ்ந்தார். இந்திய நடுத்தர சமூகத்தின் பெண் என்கிற முகம், எப்போதும் அவர் வாழ்வின் உந்துசக்தியாகவே இருக்கிறது. அவருடைய தாயார் சென்னையில் வாழ்ந்த தமிழ்ப் பெண். உயர் படிப்பிற்காக அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்காவைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் சாதனைகள் ஒரு தமிழராக எனக்குப் பெருமை அளிக்கின்றன.

வேறு நாட்டிலிருந்து குடிபெயர்ந்தவராக இருந்தாலும் தற்போதே அவர் பல தடைகளை உடைத்து பெரும் சாதனைகள் புரிந்திருக்கிறார். நான்கு வருடங்களுக்கு முன்பே சான்பிரான்சிஸ்கோவில் நிற வேறுபாட்டை உடைத்து மாவட்ட வழக்கறிஞர் குழுவில் பணிபுரிந்த முதல் பெண் வழக்கறிஞராகத் (Prosecutor) திகழ்ந்தார். மேலும் மிகத்தைரியமான பெண்ணாக நடமாடிய அவர் கலிஃபோர்னியாவில் தலைமை வழக்கறிஞர் (Attorney General) பணியில் நற்பெயர் பெற்று அதன் மூலம் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையைச் சாத்தியமாக்கிக் காட்டியவர்.

தேர்தலுக்கான நிதி திரட்டலில் கருப்பினப் பெண்ணுக்கு உள்ள தடைகளை உடைத்த கமலா ஹாரிஸ், கடந்த 11 மாதங்களில் 3.5 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.26 கோடி) பணத்தை தனது ஜனாநாயகக் கட்சியின் பரப்புரை செலவினத்துக்காகத் திரட்டிக் குவித்திருக்கிறார்” என்றவரிடம் இந்தக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கிறது என்று கேட்டோம்.

வெல்லும் கூட்டணியா?
“இந்தக் கூட்டணி நிச்சயமாக வெல்லும் என்று நான் நம்புகிறேன். ஜோ பிடன் - கமலா ஹாரிஸ் கூட்டணி ஜெயித்தால் 244 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் இத்தகைய உயரத்தை அடைந்த முதல் அமெரிக்கரல்லாதவர் மற்றும் கருப்பினப் பெண் எனும் சாதனையைக் கமலா ஹாரிஸ் படைப்பார். மேலும் 78 வயது ஜோ பிடன் ஜெயித்தால் அவர் நான்கு ஆண்டுகால ஆட்சி மட்டுமே நடத்தும் நிலையில் உள்ளார். எனவே அடுத்த அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் திகழ்வார். இம்மாதிரியான வரலாற்று நிகழ்வு, அமெரிக்கா மாதிரியான தேசத்தில்தான் சாத்தியம்” என்கிறார் கணேசன்.

கமலா ஹாரிஸ் வென்றால் விளையும் நன்மைகள் குறித்துக் கேட்டபோது, “நம்பிக்கைதான் வாழ்வின் ஒளி. நம்பிக்கைதான் வாய்ப்புகளின் வழி” இதுவே இன்றைய அமெரிக்கப் பெண்களின் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமல்ல; நிராகரிப்புக்குள்ளாகும் பல்வேறு இடங்களிலும் தாழ்த்தப்படும் மக்களுக்கான தீர்வு” என்கிறார்.

மேலும் விவரித்தவர், “வேலை செய்யும் இடங்களில் 42% பெண்கள் பாலின வேறுபாட்டால் அழுத்தத்திற்குள்ளாகின்றனர் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ராணுவத்தில் கூட 16% பெண்கள் மட்டுமே வீரர்களாகவும் 19% பெண்கள் மட்டுமே அதிகார மட்டத்திலும் வேலை செய்கிறார்கள். கமலா தேவி ஹாரிஸின் உயர்வு, சமூக அழுத்தத்திற்கு உள்ளாகும் பெண்களுக்கு, நிராகரிப்புற்கு உள்ளாகும் மக்களுக்கு, அவரது துறைப் பெண்களுக்கு, அதிகாரத்தை, வாய்ப்பைக் கைப்பற்றிப் போராடும் கனவை, நம்பிக்கையை விதைத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் அரசியலில் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள் ஆனால் அமெரிக்காவில் இதுவே முதல் முறை. அதுவும் புலம்பெயர் மக்களில் ஒருவராகப் பிறந்து நாட்டின் இரண்டாவது பெரிய இடத்தை அடைவது என்பது நினைத்தே பார்க்க முடியாத சாதனை. இது அமெரிக்க ஜனநாயகக் கனவு இன்னும் உயிர்ப்போடு, வளமாக இருப்பதை உரக்கச் சொல்கிறது” என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.

டெல்.கே.கணேசன் தயாரிப்பில், போலீஸ் வன்முறையில் இறந்த ஜார்ஜ் பிளாய்டின் கதையை ஒத்த ‘ட்ராப்சிட்டி’ என்ற ஹாலிவுட் படம் தற்போது தயாரிப்பில் இருக்கிறது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவராக, போலீஸ் வன்முறையால் பாதிக்கப்படும் மக்கள் பாடகனுக்குச் சிகிச்சை அளிக்கும் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x