Published : 26 Sep 2015 03:11 PM
Last Updated : 26 Sep 2015 03:11 PM
பூமியை பெற்ற தாயாக கருதும் பெருமைமிகு இந்திய பாரம்பரியத்தில் இருந்து தான் வந்திருப்பதாக ஐ.நா.வில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தம் முயற்சியில் இந்தியாவின் பங்கு குறித்து பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக 18 நிமிட உரையை பிரதமர் சபையில் வாசித்தார். அப்போது அவர் பேசும்போது, "7 ஆண்டுகளுக்கு முன்னர் மனித உரிமைக்காக ஐ.நா. கொள்கைகளை அறிவித்தது. தற்போது அடுத்தகட்ட பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு குறித்தும் நாம் யோசித்தாக வேண்டும்.
பருவநிலை மாற்றம், நிலைக்கத்தக்க வளர்ச்சி ஆகியவை உலகளாவிய சவால்களாக உள்ளன. இதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தீர்வு காண பொறுப்பெடுக்க வேண்டும்.
அனைத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. அவை வெவ்வேறு வகையில் இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு தனிநபரின் முயற்சியும் இன்றியமையாதது.
பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாடுகளும் அதன் பாதிப்பை எதிர்கொண்டாக வேண்டும். அதற்கான பொறுப்புகள் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளன. இந்திய நாடு பூமித் தாயை பெற்ற தாயாக கருதுகிறது. அத்தகைய பாரம்பரியத்திலிருந்து தான் நான் இங்கு வந்து பேசுகிறேன் என்பதில் பெருமையடைகிறேன்.
வளர்ச்சி சார் தொழில்நுட்பங்கள், புதுமைகள், நிதி ஆகியவற்றை எந்த சுயநலமும் இல்லாமல் அவற்றை வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிலையான எதிர்காலம் வறுமையை ஒழிக்காமல் ஏற்படாது. அதற்கு ஏழைகளுக்கான தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
ஏழைகளுக்கு உதவி அளிப்பது பெரிதல்ல. அவை அவர்களின் கண்ணியத்தை காப்பதாக நிச்சயமாக இருக்க வேண்டும். வறுமையை ஒழிக்காமல் உலக அமைதியை எதிர்பார்க்கவே முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதனை மனதில் கொண்டே வங்கி கணக்குகளை ஏழைகளுக்கு தொடங்கி அவர்களுக்கு நேரடி உதவியை அளித்து வருகிறோம். மாதம் ஒரு ரூபாய் செலவில் அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் அளிக்கப்படுகிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்." என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT