Published : 13 Aug 2020 11:38 AM
Last Updated : 13 Aug 2020 11:38 AM
உலகம் முழுதும் இந்தியா உட்பட கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில் பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு வளைகோடு தட்டையாகி வருவதாக நிபுணர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 66,999, இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 96 ஆயிரத்து 637 ஆக உள்ளது.
வேர்ல்டோ மீட்டர் தரவுகளின்படி ஜூன் 14ம் தேதியன்று பாகிஸ்தானின் கரோனா வளைகோடு உச்சம் தொட்டது. அன்று 6,825, ஏப்ரல் 15ல் 5,248, ஜூன் 16-ல் 4,443 என்று எகிறியது.
ஆனால் ஆகஸ்ட் 3ம் தேதி பாகிஸ்தானில் பதிவான கரோனா தொற்று 331, பிறகு 9, 10,11ம் தேதிகளில் முறையே 634, 539, மற்றிஉம் 531 தொற்றுக்கள் பதிவாகின.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 730 புதிய தொற்றுக்களும் 17 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. மொத்தமாக பாகிஸ்தானில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 6,139.
இத்தனைக்கும் பாகிஸ்தானில் 10 லட்சம் பேருக்கு 9,878 பேர் என்ற விகிதத்தில்தான் டெஸ்ட்டிங் நடக்கிறது. இந்தியா 10 லட்சத்துக்கு 18,831 சோதனைகளை நடத்துகிறது.
உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் 10 லட்சத்துக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் சோதனைகள் என்றால் ஐக்கிய அரபு அமீரகம் 10 லட்சத்திற்கு 5,68,223 கரோனா பரிசோதனைகளை மேற்கொள்கிறது.
ஆகஸ்ட் 4ம் தேதி தனது ட்விட்டர் தளத்தில் மேரிலேண்ட் பல்கலைக் கழக தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபர்ஹீம் யூனுஸ் குறிப்பிடும் போது, “பாகிஸ்தான், மெக்சிகோ, இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை ஒப்பிடுகையில் 150 நாடுகள் 10 லட்ச விகிதத்தில் அதிக கரோனா உடல் பரிசோதனைகளைச் செய்கின்றன. இந்த 5 நாடுகளும் தற்போது தரவுப்பனுமூட்டத்தில் உள்ளன. இவர்களுக்கு உண்மையான எண்ணிக்கை, ஹாட்ஸ்பாட்கள், மரண விகிதங்கள், மந்தை தடுப்பாற்றல் ஆகியவை பற்றி தெரியவில்லை” என்றார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் லாக்டவுன் முறைகள் தற்போது அங்கு கரோனாக் குறைப்புக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. அதாவது ஹாட்ஸ்பாட்களில் கடுமையான லாக்டவுன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒட்டுமொத்த மாநிலத்தின் வாழ்வாதாரங்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் சில நிபுணர்கள் பாகிஸ்தான் கரோனா வளைகோடு தட்டையானதற்குக் காரணம் இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் இளையோர் மக்கள் தொகை அதிகம் என்கின்றனர்.
கராச்சியைச் சேர்ந்த இண்டஸ் மருத்துவமனையின் சி.இ.ஓ. டாக்டர் அப்துல் பாரி ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறும் போது, “தொடக்கத்தில் மக்கள் இதன் தீவிரத்தை உணரவில்லை. இது மக்களைப் பீடிக்கும் பெருந்தொற்று என்பதை ஏற்கவில்லை. காரணம் சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட தவறான தகவல்கள், சதிக்கோட்பாட்டாளர்களின் கைவரிசையை நம்பினர். மே மாதத்தில் ஈத் பண்டிகைக்காக லாக் டவுனை தளர்த்தினோம், ஜூன் 2ம் வாரத்தில் பாகிஸ்தானில் கரோனா உச்சம் தொட்டது. மக்களைப் பாதிக்கத் தொடங்கியவுடன் அவர்கள் தீவிரத்தை உணரத் தொடங்கினர். எச்சரிக்கையாக இருக்க தாங்களாகவே முடிவெடுத்தனர்.
அரசு தரப்பிலிருந்து டெஸ்ட் செய்வது, நோயாளிகல் தொடர்புகளைத் தடம் காண்பது, தனிமைப்படுத்துவது என்பதாக இருந்து வருகிறது. ஒரு நபருக்குத் தொற்று ஏற்பட்டால் அவருடன் தொடர்பிலிருந்த 30 பேரையாவது பரிசோதிப்போம்.
மசூதிகளையும் கூட பாகிஸ்தான் மூடவில்லை, ஆனால் கண்டிப்பான சமூக இடைவெளி, முகக்கவச நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.
நாட்டின் படித்தவர்கள் சமூகம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்தனர், மற்றவர்கள் முகக்கவசம் அணியாமல் தான் வலம் வந்தனர், இதனால் ஓரளவுக்கு மந்தை நோய் எதிர்ப்பாற்றல் வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது.” என்றார் டாக்டர் பாரி.
ஆகஸ்ட் 10ம் தேதி பாகிஸ்தானின் மெடிக்கல் மைக்ரோபயலாஜி மற்றும் தொற்று நோய்கள் அமைப்பு அங்கு மேற்கொள்ளப்பட்ட ‘ஸ்மார்ட் லாக்-டவுன்கள்’ பற்றி புகழ்ந்துள்ளன.
“பாகிஸ்தான் கோவிட்-19 மக்கள் தொற்றின் எதிர்வினை நன்றாக உள்ளது. சரியான முடிவுகளை அவ்வப்போது மாகாண அதிகாரிகள் எடுத்ததால் தொற்றுப்பரவல் குறைந்து வருகிறது.
தொற்று நோய் நிபுணர்களின் ஆலோசனைகளின் பேரில் திட்டமிடப்பட்ட ‘ஸ்மார்ட் லாக்-டவுன்’ முறைகளினால் நல்ல பலன் கிடைத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
-(ஏஜென்சி, ஊடகத் தகவல்களுடன்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT