Published : 10 Aug 2020 05:46 PM
Last Updated : 10 Aug 2020 05:46 PM

உலக அளவில் கரோனா பாதிப்பு 2 கோடியைக் கடந்தது: முதல் 3 இடங்களில் உள்ள நாடுகளில் சேர்ந்து ஒரு கோடி பேருக்குத் தொற்று

கோப்புப்படம்

உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது என்று வேர்ல்டோ மீட்டர் கணிப்பின்படி அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியதைவிட, கரோனா வைரஸ் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியதுதான் அதிகமாகும்.

குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், பெரு ஆகிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

கரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

உலக அளவில் கரோனா பாதிப்பு மிக முக்கிய மைல்கல்லாக இன்று 2 கோடியைக் கடந்துள்ளது. வேர்ல்டோ மீட்டர் கணிப்பின்படி கரோனா பாதிப்பு உலக அளவில் 2 கோடியே 16 ஆயிரத்து 601 ஆக இருந்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 622 ஆக இருக்கிறது.

இதில் முதல் 3 இடங்களில் இருக்கும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் மட்டும் சேர்த்து ஒரு கோடி கரோனா நோயாளிகள் உள்ளனர்.

முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 51 லட்சத்து 99 ஆயிரத்து 44 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 167 பேர் பலியாகியுள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 லட்சத்து 35 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்து 136 ஆக அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 62 ஆயிரத்து 64 பேர் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்து 22 லட்சத்து 15 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மூன்று நாடுகளிலும் சேர்த்து கரோனா பாதிப்பு ஒரு கோடியைக் கடந்துள்ளது. அதாவது உலக அளவில் 50 சதவீதத்துக்கும் மேலான கரோனா பாதிப்பு இந்த மூன்று நாடுகளிலும் உள்ளது. உலக அளவில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 7.33 லட்சமாக உள்ளது.

இதில் 3.11 லட்சம் உயிரிழப்புகள் இந்த மூன்று நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. அதாவது ஏறக்குறைய 45 சதவீதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இந்த மூன்று நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

4-வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 8,87,536 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 931 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். 5-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவில் 5,59,859 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,408 பேர் உயிரிழந்தனர்.

6-வது இடத்தில் உள்ள பெரு நாட்டில் 4,78,024 பேர் கரோனாவில் பாதிக்ககப்பட்டுள்ளனர், 21,072 பேர் பலியாகியுள்ளனர்.

7-வது இடத்தில் மெக்சிகோ (4.75 லட்சம்), 8-வது இடத்தில் கொலம்பியா (3.87லட்சம்), 9-வது இடத்தில் சிலி (3.73 லட்சம்), 10-வது இடத்தில் ஸ்பெயின் (3.61 லட்சம்) ஆகியவை பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x