Published : 10 Aug 2020 05:23 PM
Last Updated : 10 Aug 2020 05:23 PM

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியா ஊடகங்கள் தரப்பில், ''இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை இன்று (திங்கட்கிழமை) வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வானில் சுமார் 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000க்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா தீவில் சுமார் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதன் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ஆபத்தான எரிமலைகள்:

தம்போரா

சும்பாவா தீவிலுள்ள மவுண்ட் தம்போரா 1815-ம் ஆண்டு வெடித்ததில் சுமார் 12,000 பேர் பலியாகினர். மேலும் இதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.

கிரகட்டோவா

கிரகட்டோவா தீவு, எரிமலை வெடிப்பால் 1883 ஆம் ஆண்டு வரைபடத்திலிருந்தே அழிக்கப்பட்டது. மேலும் இதில் 36,000 பேர் உயிரிழந்தனர். 1928-ம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் புதிய எரிமலை உருவாகியது.

கெலுட்

மவுண்ட் கெலுட் எரிமலை 1568-ம் ஆண்டு வெடித்தது. இதில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். 1919 ஆம் ஆண்டு இந்த எரிமலை மீண்டும் வெடித்ததில் 5,000 பேர் உயிரிழந்தனர்.

மெராபி

உலகின் மிகவும் ஆபத்தான எரிமலையாகக் கருதப்படும் மெராபி 1930-ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் 1300 பேர் உயிரிழந்தனர். 2010-ம் ஆண்டு மெராபி மீண்டும் வெடித்ததில் 300 பேர் உயிரிழந்தனர்.

சினாபங்க்

சுமத்ரா தீவிலுள்ள சினாபங்க் எரிமலை 2014-ம் ஆண்டு வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலியாகினர். 2016-ம் ஆண்டு மீண்டும் வெடித்ததில் 7 பேர் பலியாகினர்.

அகுங்

பாலி தீவிலுள்ள மவுண்ட் அகுங் எரிமலை 1963-ம் ஆண்டு வெடித்தபோது 1,600 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது அகுங் எரிமலை மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x