Published : 10 Aug 2020 10:00 AM
Last Updated : 10 Aug 2020 10:00 AM
சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக எழுதியதாகவும், வெளிநாட்டினருடன் சேர்ந்து சதிச்செயலில் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, ஹாங்காங் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் அதிபர் ஜிம்மி லாய் உள்பட 7 பேரை போலீஸார் இன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீன அரசு கொண்டு வந்துள்ள கொடூரமான தேசிய பாதுகாப்புச் சட்டம் கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் ஹாங்காங்கில் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா கொண்டுவந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை இந்த சட்டப் பிரிவின்படி, ஹாங்காங் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வாரண்ட் இல்லாமல் ஒருவரின் வீட்டில் ஆதாரங்களை சேகரிப்பதற்காக போலீசார் சோதனையிட முடியும். இந்த சட்டத்தில் ஒருவர் கைதானால் அவர் தன் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க வேண்டும். நாட்டை விட்டு வெளியேற முடியாது. ஒரு குறிப்பிட்ட கட்டடம், தேசிய பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் இருந்தால், அதை முடக்க, கையகப்படுத்த, போலீசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை நீக்கும்படி, இணைய தளங்கள், இணைய சேவை வழங்குவோருக்கு உத்தரவிட முடியும். அதை மீறினால், அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்., ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிடும் தனிநபருக்கும் இந்த தண்டனை பொருந்தும்.
ஒருவருடைய செல்போன், தொலைபேசி தகவல்கள் உட்பட அனைத்து தகவல்களை இடைமறிக்கவும், கண்காணிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இ்ந்த கொடூரமான சட்டத்தின் கீழ்தான் தற்போது ஆப்பிள் டெய்லி நாளேட்டின் தலைவர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஜிம்மி லாய் நடத்திவரும் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி நாளேடு பிரசுரமாகி வருகிறது. இந்த நாளேட்டில் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும், விளக்கமும் கேட்காமல் ஆப்பிள் டெய்லி நாளேட்டின் நிறுவனர் 72 வயதான ஜிம்மி லாயை ஹாங்காங் போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்தனர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு சதிகளில் ஜிம்மி லாய் ஈடுபடுவதாக சந்தேகப்படுவதையடுத்து அவரைக் கைது செய்துள்ளதாக ஹாங்காங் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம்மி லாய் மகன்கள், மற்றும் நாளேட்டின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் 7 பேரை ஹாங்காங் போலீஸார் கைது செய்துள்ளனர். ஆப்பிள் டெய்லி நாளேட்டின் உரிமையாளர் ஜிம்மி லாய்பெயரை மட்டுமே தெரிவித்துள்ள ஹாங்காங் போலீஸார் மற்ற 6 பேரின் பெயரைக் குறிப்பிட மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து ஹாங்காங் போலீஸார் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் “ தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதால், ள் 39 வயது முதல் 72 வயதுக்குட்பட்டவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனிடம் இருந்து ஹாங்காங் பிரிவதற்கு முன் கடந்த 1995-ம் ஆண்டு ஜிம்மி லாய், ஆப்பிள் டெய்லி நாளேட்டைத் தொடங்கினார். ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், சீனாவின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்தும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறது.
ஹாங்கிங்கின் ஜனநாயகத்தை முடக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சீனா கொண்டு வந்த தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் அஸ்திரம் முதன்முதலாக ஊடகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT