Published : 06 Aug 2020 10:46 AM
Last Updated : 06 Aug 2020 10:46 AM
இலங்கையில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவோம் என்று மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை மக்கள் கட்சி(எஸ்எல்பிபி) கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்று தேர்தல் நடந்தது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதன்படி இலங்கையில் 16-வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். மக்கள் சுகதாார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க 8 ஆயிரம் சுகாதாரக் கண்காணி்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
கரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.
தேர்தலில் வாக்களிக்க வந்த மக்கள் முகக்கவசம் அணிந்தும், வாக்களிக்க வரும் மக்களுக்கு சானிடைசிங் அளித்தும் பாதுகாப்பாக வாக்குப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி நடந்து, 70 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி அம்பாரா(72.80சதவீதம்), கிளிநொச்சி(71சதவீதம்), மன்னார்(79), வவுனியா(74), முல்லைத்தீவு(76), திரிகோணமலை(73), மட்டக்களப்பு(76), நுவேரா இலியா(75) ஆகிய பகுதிகளில் அதிகமான வாக்குப்பதிவு இருந்தது.
இந்நிலையில் நேற்று பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்ட முடிவு பிற்பகலுக்குப்பின் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்தா தேசப்பிரியா கூறுகையில் “ கரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. 70சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இன்று பிற்பகலுக்குப்பின் முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று இரவுக்குள் நாளை காலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே எஸ்எல்பிபி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கோத்தபாய ராஜகபக்சேயின் சகோதரருமான பசில் ராஜபக்சே செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ எங்கள் கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று வரலாற்று வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் ஆனால் அனைத்தும் மக்கள் முடிவு செய்வார்கள். அதிபர் கோத்தபாய, பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் பொருளாதாரம் மீண்டும் வலுவடையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
அதிபர் கோத்தபாய ராஜபக்சே கொழும்பு நகரின் புறநகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் நேற்று வாக்களித்தார். அவரின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே, ஹம்பனோட்டாவில் உள்ள தனது சொந்த தொகுதியில் வாக்களித்தார்.
தேர்தல் கணிப்புகளின்படி 225 இடங்களி்ல பெரும்பாலன இடங்களை மகிந்தா ராஜபக்சேவின் எஸ்எல்பிபி கட்சி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் எஸ்எல்பிபி ஆட்சி அமைந்தால் 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதிபர் அதிகாரங்களை முடிவு செய்யும் சட்டத்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT