Last Updated : 05 Aug, 2020 01:05 PM

 

Published : 05 Aug 2020 01:05 PM
Last Updated : 05 Aug 2020 01:05 PM

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கே வெற்றி வாய்ப்பு: கள‌த்தில் இருக்கும் வேட்பாளர் சண்.பிரபா பேட்டி

கொழும்பு

இலங்கையின் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆளும் கட்சியான ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன முன்னணி, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, ஐதேகவில் இருந்து பிரிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த சஜித் பிரேமதாஸ‌வின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியவை மோதுகின்றன.

கடும் மும்முனைப் போட்டிக்கு நடுவே தமிழ்க் கட்சிகளும், சுயேச்சையாக நிறையத் தமிழ் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இறுதிச் சூழலில் ஐதேக கட்சி சார்பில் களுத்துறை தொகுதியில் போட்டியிடும் தமிழ்ச் செயற்பாட்டாளர் சண்.பிரபாவிடம் தொலைபேசி வாயிலாக சில கேள்விகளை முன் வைத்தேன்.

''இலங்கையில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது? தேர்தலில் மக்கள் அச்சமில்லாமல் வாக்களிப்பார்களா?

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லாமல் 90 சதவீதம் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் எதுவும் இல்லை என்பதால் இயல்பு நிலை நிலவுகிறது.

இருப்பினும் தேர்தல் ஆணையம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தலை நடத்தியுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம், கிருமி நாசினி தெளிப்பு, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்டவை கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகின்ற‌ன. பிரச்சாரக் கூட்டங்களில் அதிகபட்சம் 500 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டதால் தேர்தல் களம் களையாகத் தென்படவில்லை. வாக்குப் பதிவும் மிகுந்த பாதுகாப்பு வசதிகளுடன், முன்னெச்சரிக்கையோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தல் தமிழர்களுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது?

2019-ம் ஆண்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்ச பதவியேற்றபோது, “என்னை வெற்றி பெற வைத்தது பெரும்பான்மை சிங்கள மக்கள்தான்” என திட்டவட்டமாகக் கூறினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது கோத்தபய ராஜபக்ச, ’இந்த முறை சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் இல்லாமலே இந்நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். அதன்படியே தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில்கூட ராஜபக்சவின் கட்சி தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. இந்தச் சூழலில் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களுக்கு இந்தத் தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாகவே இருக்கும்.

தமிழ் அரசியல் கட்சிகள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கின்றன?

வடகிழக்குப் பகுதியில் தமிழ் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி முறை முன்வைக்கப்பட்டு அதை முன்னெடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பாதையில் இருந்து விலகிச் சென்றிருக்கின்றது. இதைக் காரணம் காட்டி அதனோடு இணைந்திருந்த பல கட்சிகள் வெளியேறி இருக்கின்றன. அவை வேறுவேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றன.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துப் போட்டியிடுகிறார். அவ்வாறே கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் படைத்தளபதி கருணா தனியாகப் போட்டியிடுகிறார். கருணாவின் தளபதியாக இருந்த சந்திரகாந்தன் தனிக் கட்சியை ஆரம்பித்துப் போட்டியிடுகிறார்.

மலையகத்தைப் பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர்களான திகாம்பரம், ராதாகிருஷ்ணன் போன்றோர் என பலரும் தனித்தனியே பல கட்சிகளிலும் போட்டியிடுகிறார்கள். மலையகத்தில் சமூக முன்னேற்றத்துக்கான எந்தச் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படாத அதிருப்தியால் ஏராளமானோர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து வெளியேறி சுயேச்சையாகக் களமிறங்கியுள்ளனர்.

அப்படியென்றால் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது? அடுத்த பிரதமர் யார்?

நான் போட்டியிடும் கட்சி வெற்றி பெறும் எனச் சொல்ல எனக்கும் விருப்பம்தான். ஆனால் கள எதார்த்தங்களைப் பார்க்கும்போது, ஜனாதிபதி கோத்தபய‌ ராஜபக்சவின் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாஸ பிரிந்து செல்லாமல் இருந்திருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிறு கட்சிகளோடு சேர்ந்து வெற்றிபெறும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 ஆசனங்களில் 150 ஆசனங்களை வெல்லும் நோக்கில் ராஜபக்ச சகோதரர்கள் தேர்தலில் களமிறங்கினார்கள். கரோனா காலத்துக்கு முன்பு அதற்கு நல்ல வாய்ப்பு இருந்தது. தற்போது அந்தச் சூழல் மாறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவோம் என்ற எண்ணத்தில் இருந்த அவர்கள், இன்றைக்கு ஆட்சியை அமைத்துக் கொள்வதற்குத் தேவையான 113 ஆசனங்களைப் பெற்றால் போதும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிற சூழலினால், தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவதால் வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலால் மஹிந்த ராஜபக்ச கட்சியைச் சேர்ந்தவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு எளிதாக உருவாகிவிட்டது.

பெரும்பாலும் ஒரே இலக்கைக் கொண்ட‌ தமிழ்க் கட்சிகள் ஒன்று சேராமல் போனது ஏன்?

தமிழ் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய தமிழ்க் கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியலை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய அனுபவத்தில் கட்சித் தலைமையின் விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையிலேயே அரசியல் செய்யப்படுகிறது. தமிழ்த் தலைவர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்வோர் தொலைநோக்குப் பார்வையுடன் சமூக நலச் செயல்பாடுகளை முன்னெடுப்பதில்லை.

வேறுபட்ட கொள்கைகள் கொண்டிருந்தாலும் சமூகம், இனம் என வரும்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தைக் கூட இழந்துவிட்டனர். நாளுக்கு நாள் தலைவர்களின் தனிப்பட்ட அதிகாரப் போக்குதான் அதிகரித்துவருகிறது. உண்மையில் கொள்கையற்ற, தொலைநோக்கற்ற, சமூக சிந்தனையற்ற தலைமையின் போக்குகளால்தான் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர முடியவில்லை.

முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுவது உங்களுக்கு எத்தகைய அனுபவத்தைத் தந்தது?

களுத்துறை மாவட்டமானது தலைநகர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மேல் மாகாணத்தில் உள்ள பகுதியாக இருந்தாலும் அது முழுக்க முழுக்கத் தென் மாகாணத்தின் கலாச்சாரத்தையே கொண்டிருக்கிறது. 15 லட்சம் பேர் மக்கள்தொகை கொண்ட இந்தப் பகுதியில் சுமார் 70 ஆயிரம் பேர் மட்டுமே தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். போராட்டங்கள், பிரச்சினைகள் வருகிற பொழுது முதலாவதாகத் தாக்கப்படுகிற மாவட்டமாக இருப்பதால் இங்கு எப்போதும் ஒருவித அச்ச சூழல் நிலவும். அதனாலேயே 1994-ம் ஆண்டுக்குப் பின் கடந்த‌ 26 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இருந்து தமிழர் யாரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதில்லை.

மாகாண சபைத் தேர்தலிலும் கூட தமிழர் ஒருவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. இந்தத் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக பலத்தைப் பெற்றுத் தர வேண்டும் அவர்களுடைய பிரச்சினைகளை, தேவைகளை, அவர்களுடைய அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்.

அதிக அளவிலான தமிழ் மக்களின் வாக்குகளையும் முஸ்லிம் மற்றும் சிங்களர்களின் வாக்கையும் பெற வாய்ப்பிருக்கிறது. எனக்குத் தொகுதியில் நல்ல பெயர் இருப்பதால் துணிந்து களமிறங்கினேன். வாழ்க்கையில் எல்லாம் ஒரு அனுபவம்தானே. இந்தத் தேர்தல் போட்டியும் நல்லதொரு நம்பிக்கையான அனுபவமாகவே அமைந்தது''.

இவ்வாறு சண்.பிரபா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x