Last Updated : 02 Aug, 2020 01:50 PM

 

Published : 02 Aug 2020 01:50 PM
Last Updated : 02 Aug 2020 01:50 PM

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் கரோனா; விக்டோரியாவில் பேரிடர் எச்சரிக்கை: இரவு நேரக் கட்டுப்பாடு அமல்

கோப்புப்படம்

மெல்போர்ன்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள விக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஓசினியா கடலில் உள்ள தீவான ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் கடந்த பிப்ரவரி மாதம் பரவினாலும் அதன்பின் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் 17,800 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமையிலிருந்து 671 பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதை அடுத்து, விக்டோரியா மாநிலத்தில் பேரிடர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன் நகரில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநில ஆளுநர் டேனியர் ஆண்ட்ரூஸ் கூறுகையில், “மாநிலத்தில் பேரிடர் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 671 பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்கள் வெளியே செல்ல இரவு நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. பணிபுரியும் இடங்களில் எவ்வாறு பாதுகாப்புடன் இருப்பது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். சில நிறுவனங்களையும் மூட உத்தரவிடுவோம்.

அதேசமயம் சூப்பர் மார்க்கெட், உணவகம், மளிகைக் கடைகள், போன்றவற்றின் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என்று உறுதியளிக்கிறேன். மெல்போர்ன் நகரில் வசிக்கும் மக்கள், தாங்கள் வாழும் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்கு மட்டும் செல்லவே அனுமதிக்கப்படுவார்கள்.

மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே பாடங்களைக் கற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x