Published : 31 Jul 2020 12:50 PM
Last Updated : 31 Jul 2020 12:50 PM
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானில் கரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கிப் போன பொருளாதாரம், போர்ச்சூழல் ஆகியவற்றினால் கடும் உணவுப்பாதுகாப்பின்மை உருவாகி, அடிப்படை ஆரோக்கிய அமைப்புகள் இன்மையினால் மேலும் பல லட்சம் பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்கான் ம/ருகட்டுமான சிறப்பு கண்காணிப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர், இதனால் ஆப்கானில் கரோனா பரவல் தீவிரமடைந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு அதன் காலாண்டறிக்கையில் மானுடப் பேரழிவை நோக்கி ஆப்கான் செல்வதாக எச்சரித்துள்ளது
“கரோனா மக்கள் பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார அதிர்ச்சி, இதனால் ஏற்பட்டுள்ள பேரதிக வேலையின்மை, எல்லை மூடலால் உணவுப்பொருள் விநியோகத்தில் இடையூறு, விலைவாசிகளின் கடும் உயர்வு இவையெல்லாம் சேர்ந்து ஆப்கானின் உணவுப்பாதுகாப்பில் கையை வைத்துள்ளன. இதனால் ஏற்கெனவே அதிகரித்துள்ள வறுமை அளவில் மேலும் தாக்கத்தை செலுத்தியுள்ளன.
சுமார் 3 கோடியே 22 லட்சம் பேர் ஒன்று உணவு நெருக்கடியில் உள்ளனர், அல்லது உணவுப்பாதுகாப்பு அவசர நிலையில் உள்ளனர்.
கோதுமை மாவு, சமையல் எண்ணெய், சர்க்கரை, தானியங்கள், பருப்புகள் விலைகள் உயர்ந்தபடியே சென்று கொண்டிருக்கின்றன.
இதனால் மக்களின் வாங்கும் திறன் குறைந்ததால் பொருட்களும் விற்காமல் தேங்கிக்கிடக்கின்றன. ஆப்கான் கரோனா காரணமாக பொருளாதார வீழ்ச்சியையும் சரிவையும் சந்தித்துள்ளது. 2020-ல் ஆப்கான் பொருளாதாரம் 10% குறையவுள்ளது.
தற்போது வறுமையில் உள்ள 3 கோடியே 22 லட்சம் பேருடன் மேலும் 80 லட்சம் பேர் வறுமையில் வீழ்ந்து விடுவார்கள் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் வறுமை விகிதம் 55%-லிருந்து 80% ஆக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 36,500 பேருக்கு கரோனா தொற்று உள்ளது, 1300 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாகக் காட்டப்படுகிறது, ஏனெனில் கரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 90% மக்கள் இன்னும் பரிசோதிக்கப்படவில்லை.
தலைநகர் காபூல் வைரஸின் மையமாகத் திகழ்கிறது. கரோனாவினால் மூடப்பட்ட எல்லைகள் உட்பட குறைந்த வருவாய் முதல் 2 காலாண்டில் மட்டும் 23.4% என்கிறது இந்த அறிக்கை.
ஆப்கானிஸ்தானை மானுடப் பேரழிவிலிருந்து காப்பாற்றப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT