Published : 29 Jul 2020 07:25 AM
Last Updated : 29 Jul 2020 07:25 AM
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று முன்தினம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து 5 போர் விமானங்களும் நேற்று முன்தினம் இந்தியா புறப்பட்டன. பிரான்ஸ், இந்தியா இடையிலான தொலைவு 7,000 கி.மீ. ஆகும். மேரிங்நாக்கில் இருந்து 6,574 கி.மீ. தொலைவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப் படை தளத்தில் 5 போர் விமானங்களும் நேற்று தரையிறங்கின. இதற்கு 7 மணி நேரமானது.
பிரான்ஸில் இருந்து அல்தாப்ராவுக்கு வரும் வழியில் பிரான்ஸ் விமானப் படையின் ஏர் பஸ் 330 விமானம் மூலம் 5 ரஃபேல் விமானங்களுக்கும் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ராவில் இருந்து இந்தியாவின் ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு இன்று பிற்பகல் ரஃபேல் போர் விமானங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நகரங்களுக்கான தொலைவு 2,300 கி.மீ. ஆகும். வரும் வழியில் இந்திய விமானப்படையின் ஐ.எல்.78 ரக விமானம், ரஃபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்புகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.பிரான்ஸில் இருந்து இந்தியாவுக்கு 5 ரஃபேல் போர் விமானங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வரும் வழியில் ஒரு விமானத்தில் நடுவானில் எரிபொருள் நிரப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT