Published : 28 Jul 2020 08:18 AM
Last Updated : 28 Jul 2020 08:18 AM

ஆண்டுக்கு 1,28,000 குழந்தைகள் இறப்பார்கள்; பட்டினி சிகப்பு மண்டலத்தில் ஆப்கான்; புற்களை தின்னும் மனிதர்கள்: ஐ.நா வேதனை

கரோனா வைரஸ் பரவல் அதனையடுத்த கட்டுப்பாடுகள், சமூக விலகல்கள் உள்ளிட்டவற்றால் பட்டினிச் சமூகங்கள் ஏற்கெனவே விளிம்புக்குச் சென்று விட்ட நிலையில் சிறு பண்ணைகள் சந்தையிலிருந்தும், கிராமங்கள் உணவு மற்றும் மருத்துவ உதவியிலிருந்தும் துண்டிக்கப்பட்ட நிலையில் மாதம் ஒன்றுக்கு 10,000 குழந்தைகள் பட்டினியால் சாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

ஐநாவின் 4 முகமைகள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாகி வருகிறது என்றும் இதனால் நீண்ட கால மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும், இது தனிப்பட்ட துன்பங்களை பொதுப்பேரழிவாக மாற்றி விடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

இதற்கு உதாரணமாக ஹாஃபு சொலஞ்ச் பூவே என்ற பர்கினா ஃபாசோவைச் சேர்ந்த குழந்தையை உதாரணமாகக் காட்டி ஐநா முகமை கூறும்போது, குழந்தை 2.5 கிலோ எடையை ஒரு மாதத்திற்குள் இழந்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகளால் காய்கறி வியாபார்ம செய்து வரும் இவரது குடும்பம் விற்க முடியாமல் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தாயாரும் உணவின்றி வாடுவதால் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முடியவில்லை.

மேலும் உணவு வீணடிப்பால் 550,000 குழந்தைகள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். கைகால்கள் எலும்புக் கூடாகி வயிறு ஊதிய குழந்தைகள் பெருகி வருகின்றன. கடந்த ஆண்டு இத்தகைய ஊட்டச்சத்து இன்மை, பட்டினியில் வாடும் குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 4.7 கோடியாக இருந்தது ஓராண்டில் மேலும் 67 லட்சம் குழந்தைகள் இதே போன்று பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கோவிட் நெருக்கடியின் உணவுப் பாதுகாப்பு விளைவுகள் இப்போதிலிருந்து பல ஆண்டுகளுக்கு பிரதிபலிக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பின் ஊட்டச்சத்து தலைமையான பிரான்செஸ்கோ பிராங்கா கூறுகிறார். இது சமூக விளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறார்.

லத்தீன் அமெரிக்கா முதல் தெற்காசியா வரை சப்-சஹாரா ஆப்பிரிக்கா என்று உணவின்றி வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலக உணவுத்திட்ட தலைமை டேவிட் பீஸ்லி விடுத்த எச்சரிக்கை உலக நாடுகளின் மிகுந்த கவனத்துக்க்குரியது.

அதாவது கரோனா வைரஸ் பரவலால் வீழ்ச்சியடையும் பொருளாதாரங்களினால் பைபிளில் குறிப்பிடப்பட்ட பெரும் பஞ்சத்திற்கு உலகை இட்டுச் செல்லும் என்பதே அந்த எச்சரிக்கை. உணவுப்பாதுகாப்பு என்று அறியப்படும் ஒன்றில் பல்வேறு கட்டங்கள் உள்ளன. மக்கள் தொகையில் 30% உணவின்றி பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டால் அதை நாம் பஞ்சம் என்று அறிவிக்கிறோம்

வெனிசூலா நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உணவு கிடைப்பதில்லை என்று ஏற்கெனவே உலக உணவுத்திட்டம் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது.

டச்சீராவின் எல்லை மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பிரான்சிஸ்கோ நீட்டோ ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்தில்லாத குழந்தைகளை இங்கு அனுமதித்து வருகிறோம் என்கிறார்.

2 மாத கால கரோனா தனிமைக்குப் பிறகு 18 மாதங்களே ஆன இரட்டைப்பிறவிக் குழந்தைகள் மருத்துவமனைக்கு வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்கிறார் டாக்டர் நீட்டோ. குழந்தைகளின் தாயாருக்கு வேலையில்லை. கொதிக்கவைத்த வாழைப்பழச்சாறு மட்டுமே சாப்பிடுவதாக அவர் டாக்டரிடம் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது நிலைமை மோசமாகி இரட்டைப் பிறவியில் ஒரு குழந்தை இறந்தே போனது.

உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகிய 4 அமைப்புகளும் உலக பட்டினியை ஒழிக்க உடனடியாக 2.4 பில்லியன் டாலர்கள் நிதி கேட்டுள்ளது.

வைட்டமின் ஏ உலக அளவில் கிடைப்பதில்லை, இதுதான் நோய் எதிர்ப்பாற்றலை பெருகச் செய்யும்.

ஆப்கானிஸ்தானில் கரோனாவினால் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஊட்டச்சத்து குறைந்து போன பட்டினிக் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு வர முடியவில்லை. இப்படியே போனா ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று கூறுவது போல் ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் கீழ் உள்ள சிறார்கள் 13,000 பேர் விரைவில் பட்டினிச்சாவு அடைவார்கள்.

பட்டினியில் சிகப்பு மண்டலத்தில் உள்ளது ஆப்கானிஸ்தான். ஊட்டச்சத்துக் கடும் குறைபாடுடைய குழந்தைகள் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 6,90,000 ஆக இருந்தது தற்போது 7,80,000 ஆக 13% அதிகரித்துள்ளது என்கிறது யுனிசெஃப்.

ஏமனில் கட்டுப்பாடுகளினால் உதவி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, இதோடு சம்பளமின்மை, விலை உயர்வுப் பிரச்சினைகளும் உள்ளன. அரபு நாட்டின் பரம ஏழை நாடான ஏமனுக்கு மனிதார்த்த உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏமன் தற்போது பஞ்சத்தின் பிடியில் உள்ளது. சப் சஹாரா ஆப்ரிக்காவில் நிலைமைகள் இன்னும் மோசம். சூடானில் 96 லட்சம் பேர் நாளொன்றுக்கு ஒருவேளை குறைந்த உணவுடன் வாழ்கின்றனர். இது மேலும் 65% அதிகரிக்கும்.

சூடானில் லாக் டவுன் பிரச்சினைகளால் பணவீக்க விகிதம் 136% அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை மும்மடங்கு அதிகரித்துள்ளது.

தெற்கு டார்ஃபரில் கல்மா முகாமைச் சேர்ந்தவர்கள் பட்டினியால் புற்களையும், தாவரங்களையும் தின்று வாழ்ந்து வருகின்றனர்.

சூடான் மேற்கு டார்ஃபரில் கண்ணெதிரே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு குடும்பத்தில் 10 பேர் இருந்தால் ஒருவர் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழல், அந்த ஒருவரும் கரோனா காரணமாக கடந்த ஏப்ரல் முதல் வேலை செய்ய முடியவில்லை.

இப்படியாக மைய நீரோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட விளிம்புநிலை வறுமை, பட்டினி சமூகங்கள் ஏழை நாடுகளில் அதிகரித்து வருகிறது என்று ஐநா வேதனை தெரிவித்துள்ளது.

(ஏஜென்சி தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x