Last Updated : 24 Jul, 2020 03:51 PM

 

Published : 24 Jul 2020 03:51 PM
Last Updated : 24 Jul 2020 03:51 PM

அமெரிக்கா-சீனா இடையே நடக்கும் மோதல் உலக வர்த்தகத்தை பாதிக்கும்; அதை இந்தியா பயன்படுத்த வேண்டும்: ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் : கோப்புப்படம்

நியூயார்க்


அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் மோதல் அதிகரிக்கும் போது, உலக வர்த்தகத்தில் நிலையற்ற சூழல் நிலவும், இதை இந்தியா, பிரேசில் போன்ற வளரும் சந்தையைக் கொண்டுள்ள நாடுகள், கரோனா பாதிப்புக்குப்பின் மீண்டெள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மிச்சிகன் பான்ஐஐடி யுஎஸ்ஏ சார்பில் “கரோனாவுக்குப்பின் உலகப் பொருளாதார விதிகள்” எனும் தலைப்பில் நடந்த மாநாட்டில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் காணொலி வாயிலாக நேற்றுப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஏராளமான நிறுவனங்கள் திவாலாகப் போகின்றன, அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. ஆதலால், நாம் பொருளாதாரத்தைச் சரிசெய்து, வளங்களை மறுஒதுக்கீடு செய்து, முதலீட்டை மறுகட்டமைக்க வேண்டும்.

அமெரி்க்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது, இந்த நேரத்தில் அமெரிக்கா, சீனா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு வல்லரசுநாடுகள் மோதலால், சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற சூழல் உண்டாகி பாதிக்கப்படும்.

இந்த காலச்சூழல் என்பது பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு முக்கியமான காலகட்டம். கரோனா வைரஸால் பொருளாதாரம் பாதிப்படைந்திருக்கும் நிலையில் தேவையை அதிகப்படுத்தி பொருட்கள் உற்பத்தியைப் பெருக்கி, மீண்டும் எழுவதற்கு இந்தசூழலை நன்கு பயன்படுத்த வேண்டும்.

லாக்டவுன் மூலம் கரோனா வைரஸைஅமெரிக்கா, இந்தியா நாடுகள் கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால் சில நாடுகளில் இரண்டரை மாதங்களில் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு மீண்டும் இயல்புக்கு வந்துவிட்டார்கள்.

ஆனால், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறன. கரோனா வைரஸை வெல்வதற்கு அந்நாடுகள் மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

வர்த்தகத்திலும் உறுதியில்லாத சூழலை கரோனா வைரஸ் உருவாக்கியிருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வருமா, ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் போன்ற கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் இருக்கிறது. அமெரிக்காவில் இன்னும் சில மாநிலங்களில் புதிதாக லாக்டவுன் விதிப்பதுகுறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

வளர்ச்சி அடைந்த நாடுகளில் லாக்டவுனை மனதில் வைத்து, 50 சதவீதம் மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலுக்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள்.

ஆனால், வளரும் நாடுகளான இந்தியா,பிரேசில் போன்றவற்றில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள், வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் மிகக்குறைவுதான்.

ஆகவே, வளர்ந்துவரும் நாடுகளில் செயல்படுத்தப்பட்ட இந்த லாக்டவுன் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைந்து, குறைந்த நடுத்தரக் குடும்பத்தில் இருக்கும் மக்கள் ஏழ்மைக்குச் சென்றுவிட்டார்கள்.

இனிமேல், கல்விக்கும்,டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தொழில்களிலும், நிறுவனங்களிலும் மனித உழைப்பைக் குறைக்கும் வகையில் அதிகமான ஆட்டோமேஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

கரோனா தொற்றிலிருந்து நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அரசு முழுமையாக வெளியேறும்போது ஏராளமான கடன்களைக் கொண்டிருக்கும். காலப்போக்கில் அதை எவ்வாறு மறுசீரமைப்பது மற்றும் குறைப்பதில் அதிக கவனம் தேவை.

உலகளவில் வங்கிகளில் வாராக்கடன் அதிகரிக்கும் சூழல் இருக்கிறது. கடந்த காலத்தில் இருந்த வாரக்கடனைவிட பன்மடங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆதலால் நிறுவனங்கள் உற்பத்திக்காகவும், பணிக்கும் திரும்புவதற்காகவும் இந்த கடன்களைத் தவிர்க்கவும் நாம் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளில் அதிகமான நேரத்தைச் செலவழிப்பது அவசியம்.

நிறுவனங்களின் முதலீடு கட்டமைப்பைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாவிட்டால், நம்முடைய பொருளாதார வளர்ச்சி குறைந்து, அடுத்தடுத்து பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை உருவாகும். ஆதலால், ஆட்சியில் இருப்பவர்கள் இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகமான சிக்கன நடவடிகைக்கும் மற்றும் சேமிப்புக்கும் திரும்புகிறார்கள். இந்த நெருக்கடியால் உலகளாவிய நல்ல சுகாதாரத் திட்டத்தின் தேவைக்கு அதிக அழுத்தம் இருக்கும். போதுமான சுகாதார முறையில்லாததன் விளைவை அமெரி்க்காவில் இல்லை, இந்தியாவில் பார்த்திருக்கிறோம்.

ஆதாலால் இந்த நேரத்தில் பிரச்சினைகளை சமாளிக்கும் தகுதியான அரசுக்கு தேவை இருக்கும். அரசுகளின் திறமையின்மையால் என்னாகும் என்பதை பார்த்திருக்கிறோம், மேலும் பிரச்சினைகளைப் பெரிதாக்கும்.ஆதலால் அதிகமான திறமையான அரசுகளுக்கு மக்கள் மத்தியில் அதிகமான ஆதரவு இருக்கும், அதிகமான கட்டுப்பாடுகளுக்கும் ஆதரவு இருக்கும்.


இவ்வாறு ரகுராம்ராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x