Published : 23 Jul 2020 02:10 PM
Last Updated : 23 Jul 2020 02:10 PM
சீனாவில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையின் காரணமாக அங்கு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த சில நாட்களாக புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இதனால் ஆறுகளில் அதீத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சில பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாயின.
இந்நிலையில் தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிற நிலையில், ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சி மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மில்லியன் டாலர் அளவில் பொருளாதாரச் சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், வெள்ளப் பெருக்கு காரணமாக கடும் சேதத்துக்கு உள்ளான பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களை அழித்து கட்டிடங்களைக் கட்டி வருவது, தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணாமாக சீனா இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்கு எளிய இலக்காக மாறியுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிடவும் கடந்த ஜூன் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகமாக உள்ளது.
சீனா இத்தகைய கனமழையை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும் 1961-க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT