Published : 14 Jul 2020 08:07 AM
Last Updated : 14 Jul 2020 08:07 AM
உலகம் முழுதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இரண்டாம் அலை தொடங்கியுள்ளதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை மொத்தம் 17 லட்சத்து 91 ஆயிரத்து 767 பேராக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 247 ஆக அதிகரிக்க, பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 79 ஆயிரத்து 483 ஆகி உள்ளது.
இதனையடுத்து உலக நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவே கண்களுக்குத் தெரியும் எதிர்காலத்தில் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
“வைரஸ் பரவல் படுமோசமாகி வருகிறது, எதிர்காலம் நிச்சயமற்று உள்ளது, இயல்பு நிலை திரும்புமா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுக்கிறது” என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
நாடுகள் வைரஸுக்கு எதிராக ஒரு பரந்துபட்ட ஒட்டுமொத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிய தொற்றுக்களில் பாதி அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இவரது கவலைக்குக் காரணம் புளோரிடாவில் ஒரேநாளில் 15,000த்துக்கும் அதிகமான புதிய கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதே.
அடிப்படைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் இந்த கரோனா பெருந்தொற்று ஒரே பாதையில் தான் பயணிக்கும். அதாவது இது மேன் மேலும் மோசமாகும், மோசமாகும் ,மோசமாகும் என்று கெப்ரியேசஸ் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே வைரஸின் மூலம் தேடி உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு சீனாவுக்குச் சென்றுள்ளனர்.
புளோரிடா மாகாண மக்கள் தொற்று நோய் நிபுணர் சிண்டி பிரின்ஸ் கூறும்போது, “எப்படியாவது இதனைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றே உறுதியாக நம்பினோம். நாடு முயற்சிக்க வேண்டும், இதில் மனிதர்களின் நடத்தை முக்கியமானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் சரியாக எதையும் கடைபிடிக்கவில்லை” என்று வருந்தியுள்ளார்.
சனிக்கிழமையன்று கரோனா மறுப்பாளர் அதிபர் ட்ரம்ப் முதல்முறையாக முகக்கவசம் அணிந்து வெளியே வந்தார். புளோரிடாவில் வால்ட் டிஸ்னி வேர்ல்டைத் திறந்ததால் ஒரே நாளில் 15,299 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. மொத்தம் 269,811 பாதிப்புகள் புளோரிடாவில் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரே நாளில் 28,000-த்திற்கும் அதிகமானோருக்குக் கரோனா பரவியுள்ளது. இதனையடுத்து உலகச் சுகாதார அமைப்பு கண்களுக்கு எட்டும் எதிர்காலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT